நீட் தேர்வு விலக்கு கேட்டு நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய நிலையில் மூன்று நாள் பயணமாக ஆளுநர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நீட் விவகாரத்தில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அனைத்து கட்சிகளும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்து வருகின்றன. அதன்படி சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
நான்கு மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட அந்த மசோதாவில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான அம்சங்கள் இருப்பதாக கூறி ஆளுநர் தமிழக அரசுக்கே அந்த மசோதாவை திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சில கட்சிகள் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டங்களையும் அறிவித்துள்ளன.
இந்நிலையில் வரும் 7-ஆம் தேதி ஆளுநர் டெல்லி செல்ல உள்ளதாகவும், அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்த பிறகு தான் தமிழகம் திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.