''இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை'' அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்..!
i am not in a position to play a double role Thirumavalavan
''இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைஅறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, தி.மு.க.,வினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.
சென்னை வேளச்சேரியில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary School என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் திருமாவளவன் தான் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அத்துடன், அண்ணாமலை அவர்கள், அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் திருமாவளவன் நிருபர்களிடம் பேசிய கூறியதாவது:
''அந்தப் பள்ளியை நான் நடத்தவில்லை. எங்கள் இடத்தில் ஒருவர் அதனை நடத்துகிறார். நடத்த துவங்கி இருக்கிறார். பெயர் மட்டும் தான் அறிவித்து உள்ளனர். எங்கள் இடம் என்பதால், எனது பெயரை பயன்படுத்துகிறார். அப்பள்ளி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அறிவிப்பு மட்டும் தான் வந்துள்ளது.'' என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர், ''எங்கள் இடத்தில் ஏற்கனவே ஒரு தனியார் நிர்வாகம் பள்ளி நடத்தினார்கள். தற்போது போய் விட்டார்கள். இன்னொருத்தர் வருகிறார். எங்கள் இடம் என்பதால் எனது பெயரை பயன்படுத்துகிறார்.

அண்ணாமலை பரபரப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசி கொண்டே உள்ளார். அவருக்கு ஊடக கவன ஈர்ப்பு முக்கியமானதாக இருக்கிறது. நாகரிக அணுகுமுறை என்பதை முற்றாக தவிர்த்துவிட்டு யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்து அரசியல் செய்கிறார்.'' என்று பேசியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ''அவரது அணுகுமுறை வியப்பாக உள்ளது. இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை. எங்கள் இடத்தில் ஒரு நிறுவனம் பள்ளி நடத்துவதற்கு அனுமதி கேட்டு உள்ளனர். அவ்வளவு தான். அதற்கு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. வகுப்புகள் துவங்கப்படவில்லை. ஒரு மாணவர் கூட சேரவில்லை. அறிவிப்பு மட்டும் வந்துள்ளது அவ்வளவு தான். அது எங்களுடைய நிலம் என்பதால், எனது பெயரை பயன்படுத்துகின்றனர்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் பேசுகையில்; ''மாணவர்கள் மீது அண்ணாமலைக்கு அக்கறை, பொறுப்பு இருந்திருந்தால், மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை பெற்றுத்தர வேண்டியது தானே. நான் பன்மொழிக்கொள்கையை வரவேற்பவன். எந்த இனத்தின் மீதும், மொழியின் மீதும் வெறுப்பு இல்லை. ஹிந்தியை கட்டாயம் கற்க வேண்டும் என்ற தேவை ஏன் வந்தது?
ஏழை மாணவர்கள் ஹிந்தி படித்தால் வேலை கிடைக்குமா? இந்த வாதமே தவறு. இயன்றவர்கள், விருப்பமுள்ளவர்கள் படிக்க வேண்டும் என்பது வேறு. கட்டாயம் ஹிந்தி படிக்க வேண்டும்; எழுத வேண்டும் என்ற தேவை எங்கு இருந்து வந்தது? '' என்று அவர் திருமாவளவன் மேலும் பேசியுள்ளார்.
English Summary
i am not in a position to play a double role Thirumavalavan