விருதுநகரில் கூட்டுக் குடிநீர் திட்டம்!... ரூ.75.85 கோடி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்!
Joint drinking water project in virudhunagar chief minister mk stalin approves allocation of rupees 75 and 85 crore
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு, வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு ரூ.80.00 கோடி மதிப்பீட்டில் 29,000 மக்கள் பயனடையும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது.
இத்திட்டத்திற்கு தேவையான நீர், வைகை ஆற்றில் மேலக்கால் அருகில் கொடிமங்களம் தடுப்பணை மேல்புரத்தில் அமைக்கப்படும் 11 நீர் உறிஞ்சு கிணறுகள் மூலம் பெறப்பட்டு காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படும். இத்திட்டம் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், சுமார் 36,000 மக்கள் பயன்பெறுவர்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்திட்டத்தினை ரூ.75.85 கோடி மதிப்பீட்டில் மாநில நகர்ப்புர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (SUIDF), கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டு திட்டம் (KNMT) மற்றும் மூலதன மானிய நிதி (CGF), ஆகிய நிதியாதாரங்களின் கீழ் செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், காரியாபட்டி பேரூராட்சி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சி ஆகியவற்றின் குடிநீர் தேவையை மேலும் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் அமைகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Joint drinking water project in virudhunagar chief minister mk stalin approves allocation of rupees 75 and 85 crore