விருதுநகர் இளம்பெண் பாலியல் துன்புறுத்தல்! வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்திடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
k balakirushnan say about viruthunagar harassment case
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "விருதுநகரில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் தொழிலாளியை மாணவர்கள், ஆளும் கட்சிக்காரர்கள் உள்பட 8 பேர் ஆறு மாத காலம் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு செய்து வந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இக்கொடிய நிகழ்வு வன்மையான கண்டனத்துக்குரியது.
உள்ளூர் அரசியல் நிர்ப்பந்தத்தையும் மீறி, 8 குற்றவாளிகளும் இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.
காதலிப்பதாக ஆசை காட்டி உறவுகொண்டு அதை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி, அவர்களும் அந்த வீடியோவை வைத்து மிரட்டி அந்தப் பெண்ணைத் தொடர்ச்சியாக வல்லுறவு செய்து வந்திருக்கிறார்கள். உதவி செய்யக் கோரி இந்த அநீதியை அந்த இளம்பெண் யாரிடம் சொன்னாரோ அவரும் அந்த வீடியோவைப் பயன்படுத்தி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருக்கிறார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் உளைச்சலை அந்தப்பெண் சந்தித்திருக்கிறார்.
உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ உதவிகளை செய்வதோடு, ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். பொள்ளாச்சி வன்கொடுமை பிரச்சனையில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளியிட்டது போல் இந்த முறையும் நடந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பெண்களைப் பாலியல் பொருளாகக் காட்டும் ஊடக சித்தரிப்பு, போதைப்பழக்கம் மற்றும் ஆபாச படங்களை இணையதளத்தில் சுலபமாகப் பார்க்கும் நிலைமை, குறைவான தண்டனை விகிதம் போன்றவை இத்தகைய குற்றங்களை ஊக்குவிக்கிறது. விசாரணை முறை, நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்படும் விதம், அதீத காலதாமதம், பெண்ணை நோக்கி சமூகத்தின் அவதூறுகள் போன்றவை பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் நிலைகுலைய வைக்கின்றன.
எனவே குறிப்பிட்ட கால வரையறைக்குள் வழக்கு விரைந்து முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டணை வழங்கப்பட வேண்டும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.
குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைவானவர்கள் உள்ளனர் என்பது கவலையளிக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த நிலைமையை மாற்றுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று தமிழக அரசையும், தமிழக காவல் துறையையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது"
இவ்வாறு அந்த அறிக்கையில் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
English Summary
k balakirushnan say about viruthunagar harassment case