கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் பலி.! தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்க.! சிபிஐ(எம்) வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம், கெடிலம் ஆற்றில் மூழ்கி சிறுமியர் உட்பட ஏழு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்து அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

விபத்தில் சிக்கி பலியானவர்கள் ஏ.குச்சிபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள், இருவர் விருந்தினராக அங்கு வந்தவர்கள். அனைவருமே பட்டியல் சாதியை சேர்ந்தவர்கள். 600க்கும் அதிகமானவர்கள் வசிக்கும் அந்த கிராமத்தில், பெரும்பான்மை வீடுகளில் தனி கழிப்பிட வசதி இல்லை. 

விபத்தில் பலியான 7 பெண்களும், பொது வெளியில் காலைக் கடன்களை முடித்துவிட்டு, கெடிலம் ஆற்றின் தடுப்பணை அருகே சுத்தம் செய்வதற்காக சென்றிருக்கிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசு அந்த கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் தண்ணீர் வசதியுடன், கழிப்பறை வசதி ஏற்படுத்த திட்டமிட்டு பணிகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், தடுப்பணை கட்டுவதற்காகவும், கரைகளை பலப்படுத்துவதற்காகவும் மண் எடுக்கப்பட்ட குழி மூடப்படாமலே இருந்துள்ளது. அதில் நீர் மற்றும் சேறு சேகரமாகியிருந்ததன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

எனவே, இவ்விசயத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு, தடுப்பணை கட்டுமானம் மற்றும் கரை பலப்படுத்துதல் பணிகளை மேற்பார்வை செய்த அதிகாரிகள் மற்றும் இவ்விசயத்தில் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். விபத்தில் பலியான பெண்கள் மற்றும் சிறுமியரின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு சார்பில் அறிவித்துள்ள நிவாரணத்தை தலா ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராணி என்பவருடைய பேரன், பேத்திகளான வினோதி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகிய மூன்று குழந்தைகள் அக்கிராமத்தில் உள்ள செயல்படாத கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். நீச்சல் தெரியாத காரணத்தினால் குட்டையில் தவறி விழுந்துள்ளனர். 

அவர்களை காப்பாற்றுவதற்காக அவர்களது பாட்டி புஷ்பராணியும் கல்குவாரி குட்டையில் குதித்துள்ளார். நான்கு பேர்களும் பரிதாபமாக கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். விபத்தில் பலியான புஷ்பராணி குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

அண்மைக்காலமாக, நீர்நிலைகளில் இளைஞர்கள், சிறுவர், சிறுமியர் மூழ்கி பலியாவது தொடர்கதையாக உள்ளது. எனவே, ஆற்றில் மணல் எடுக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நீர்நீலைகளில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பற்ற பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் 28.3 சதவிகித கிராமப்புற வீடுகளில் தனியாக கழிப்பறை வசதி இல்லாத சூழலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்துகிறோம்.

இன்றைய தினம் வாழ்க்கை முறை மாறியுள்ள நிலையில் நீச்சல் தெரியாத காரணத்தினாலும் இப்படிப்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இனிமேல் இப்படிப்பட்ட உயிரிழப்புகளை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்திட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்"

இவ்வாறு அந்த அறிக்கையில் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

k balakrushnan Say about cuddalore kedila river accident issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->