கும்பகோணம் தனி மாவட்டம் | முதல்வர் ஸ்டாலினுக்கு, பாமக சேர்மேன் ஸ்டாலின் மனு! - Seithipunal
Seithipunal


கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று, கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

பாமகவை சேர்ந்த ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ம.க. ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சியினர், இன்று கும்பகோணம் கோட்டாட்சியரிடம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அனுப்புவதற்காக மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், "சோழர் காலத்தின் தலைநகரமாக இருந்தது கும்பகோணம். கோயில்களின் நகரமாகவும் கும்பகோணம் திகழ்ந்து வருகிறது. கடந்த 1868 ஆம் ஆண்டு கும்பகோணம் ஜில்லாவாக, தலைநகராக இருந்ததற்கு உண்டான சான்றுகள் உள்ளன. 

மேலும் தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் அரசு கல்லூரி, நவக்கிரக கோவில்கள், புராதன சின்னங்கள், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாசி மகாமகம் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற விழாக்கள் மற்றும் வர்த்தகம், பாரம்பரியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கும்பகோணம் தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தின் பெரும்பாலான அரசுத்துறை தலைமை அலுவலகங்களும், பல்வேறு தனியார் வங்கிகளின் தலைமையிடமாகவும் கும்பகோணம் திகழ்ந்து வருகிறது. 

வெளிநாட்டவர் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்தவர்கள் வந்து செல்லும் பகுதியாக இந்த கும்பகோணம் திகழ்ந்து வருகிறது. கணிதமேதை ராமானுஜம், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் உள்ளிட்ட பல தலைவர்கள், அறிஞர்கள் பிறந்த பகுதி இந்த கும்பகோணம் ஆகும்.

இத்தனை சிறப்புகளை கொண்ட கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் முன் எடுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களுக்குள் கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் அமைப்போம்" என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

ஸ்டாலினின் இந்த வாக்குறுதியை ஏற்று கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட மூன்று தொகுதி வாக்காளர்கள் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களித்த வெற்றி பெறச் செய்தார்கள்.

ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற 600 நாட்கள் கடந்த நிலையில், கும்பகோணத்தை தனி புதிய மாவட்டமாக அறிவிக்காதது 3 சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எனவே வருகின்ற முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் மு க ஸ்டாலின் வருவாய் மானிய கோரிக்கை அல்லது 110 விதியின் கீழ் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ma ka Stalin Request to CM stalin Kumbakonam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->