திமுக அரசுக்கும் ஆதரவாக செயல்பட்டதால் தான் சஸ்பெண்ட்! ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த திருமாவளவன்!
VCK Thirumavalavan condemn to TN Governor
டிசம்பர் 12ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் ரவி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது பணம் பெற்றுக்கொண்டு உரிய கல்வித் தகுதி இல்லாத 40 பேரை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களில் அமர்த்தியதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த கடந்த 2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். உரிய தகுதி இல்லாத அந்த 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகையில் இருந்து துணைவேந்தர் திருவள்ளுவனிடம் இருமுறை விளக்கம் கேட்டதாகவும், அதற்கு முறையான பதிலை தராமல் காலம் கடத்தியதாலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவனை திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ரவி கைவிட வேண்டும். அவர் மீதான பணியிடை நீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று, விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஆளுநரின் விருப்பறிந்து துணைவேந்தர் இயங்கவில்லை என்பதும் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்குக் காரணமெனத் தெரியவருகிறது.
திராவிட அரசியலுக்கும் திமுக அரசுக்கும் ஆதரவாகவே துணைவேந்தர் செயல்படுகிறார் என அவருக்கு எதிரான சக்திகள் தொடர்ந்து கோள்மூட்டியதையடுத்து, ஆளுநர் அவர்கள் ஆத்திரம் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
எனவே, இத்தகைய பழிவாங்கும் போக்கை கைவிட்டு, துணைவேந்தர் மீதான நடவடிக்கையை அவர் திரும்பப் பெற வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
VCK Thirumavalavan condemn to TN Governor