அதிமுகவினரை காப்பாற்ற ஆளுநர் போடும் இரட்டை வேடம்.! - அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு.!!
Minister Raghupathi accused governor of playing double role
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், பி.வி ரமணா, கே.சி வீரமணி ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளில் விசாரணை தூங்குவதற்கு ஆளுநர் இசைவு வழங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று ஆளுநருக்கு கடிதம் எழுதியதற்கு இன்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது.
ஆளுநரின் விளக்கத்தை ஏற்க மறுத்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு தொடர்வது குறித்து அனுமதி கோரும் கோப்புகள் கடந்த 2022 செப்டம்பர் 12ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டப்படியான விசாரணை நடைபெறுகிறது என மழுப்பலான பதிலை ஆளுநர் அளித்துள்ளார். யார் விசாரணை நடத்துகிறார்கள் என்பதை விளக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வழக்கு தொடர்வதற்காக முழுமையான கோப்புகள் ஆளுநருக்கு கடந்த 2022 செப்டம்பர் 12ஆம் தேதி அனுப்பியுள்ளோம். ஆனால் ஆவணங்கள் வரவில்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்திருக்கிறது. முழுக் கோப்புகளும் அவரிடம் தான் உள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர்வதற்காக கடந்த 2022 மே 15ஆம் தேதி அரசிடமிருந்து கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எதுவும் வரவில்லை என ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு கூறுகிறது.
உண்மைக்குப் புறம்பான கருத்துகளை ஆளுநர் மாளிகை வெளியிட்டால், பொதுமக்கள் இனி ஆளுநர் மாளிகை அறிவிப்புகளை நம்புவார்களா? அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றவும், திமுக அரசை பழிவாங்கும் வகையிலும் ஆளுநர் இரட்டை வேடம் போடுகிறார். இதற்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின் அஞ்சமாட்டார். சில விவகாரத்தில் ஆளுநர் அரசியல் செய்யக் கூடாது.
தெலங்கானா, மேற்கு வங்க மாநிலங்களில் ஏற்கெனவே ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பொறுமையாக இருந்த வருகிறார். அவரது பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுவரை ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வரவில்லை. பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட குறிப்புதான் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வரின் ஆலோசனை பெற்று பதில் கடிதமாகக் கொடுப்பதா அல்லது பத்திரிகைக் குறிப்பாக பதில் அளிப்பதா என்பதை விரைவில் முடிவு செய்ய உள்ளோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Raghupathi accused governor of playing double role