ஆளுநரை சந்தித்த முதலமைச்சர்.. ஆளுநர் அளித்த வாக்குறுதி.!
mk stalin meet governor rn ravi
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்ப வலியுறுத்தி தமிழக ஆளுநருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.
இதுகுறித்து, மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. அதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்கக் கூட்டத்தில், இந்த சட்டமுன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது, 2021-2022ஆம் கல்வி ஆண்டு முடிவுக்கு வந்து, 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக ஆளுநரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
மேலும், இதே போன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமைந்திடும் என தமிழக ஆளுநரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் இறுதியில், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.
ஆளுநருடனான இந்த சந்திப்பின் போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
English Summary
mk stalin meet governor rn ravi