மாணவிக்கு பாலியல் தொல்லை; உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது!
Sexual harassment of student Physical education teacher arrested under POCSO Act
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே,8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் சமீப காலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு அளித்து வருவது வேதனையின் உச்சமாக உள்ளது.என்னதான் காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும்,மறுபுறம் பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகரித்துதான் சென்றுகொண்டு இருக்கிறது.
இந்தநிலையில் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மாவடிபுதூரைச் சேர்ந்தவர் மோகன் என்ற ஆசிரியர் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
54 வயதான மோகன் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சம்பவத்தன்று அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை உடற்கல்வி அறைக்கு தனியாக வருமாறு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி நடந்த சம்பவத்தை வீட்டுக்கு சென்று தனது தாயாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து இதுதொடர்பாக மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் மோகனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Sexual harassment of student Physical education teacher arrested under POCSO Act