தமிழக அரசே.. சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்திடு.. களத்தில் இறங்கும் மக்கள் நீதி மய்யம்.!! - Seithipunal
Seithipunal


சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி இன்று மக்கள் நீதி மய்யம் சார்பாக தமிழகமெங்கும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மனு வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிக்கையில், நடந்து முடிந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு - 2022ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில், “நல்ல திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் நீங்கள் மேற்கொள்ளும் அதே சமயத்தில், மக்களை உடனடியாக பாதிக்கக்கூடிய சில குறிப்பிட்ட அடிப்படை அரசுப் பணிகளிலும், உதாரணமாக, பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல் போன்றவற்றில் நீங்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுப் பேசினார்.

ஆட்சிக்கு வரும்முன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய பிரதானமான பிரச்சாரமாக மக்கள் தங்கள் குறைகளை மனுவாக வழங்க வேண்டும் என்றும் அவை அனைத்தும் 100 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்த பின் அதற்காக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு இன்றுவரை பல இடங்களிலும் மனுக்கள் பெறப்பட்டும், அவை தீர்க்கப்பட்டும் வருவதாக செய்திகள் வருகின்றன. இவற்றில் பல மனுக்கள் முதல்வர் சொல்லியிருப்பது போல் அடிப்படை பிரச்சனைகள் சார்ந்தவைதான். 

இது மட்டுமில்லாமல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் குறை தீர்ப்புநாளில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மக்கள் வழங்கும் பல்லாயிரக்கணக்கான மனுக்களில் பெரும்பான்மையானவை இதே அடிப்படை பிரச்சனைகள் சார்ந்தவைதான். கொடுக்கப்படும் மனுக்களுக்கு எப்போது தீர்வுகிடைக்கும் என்பதை மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியரால் கூட நிர்ணயிக்க முடியாத நிலைதான் இப்போது உள்ளது. ஓரிருவாரத்தில் முடிக்கப்பட வேண்டிய பிரச்னைகள், ஓரிரு ஆண்டுகள்வரை கூட இழுத்தடிக்கப்படுகிறது. இவற்றிற்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு முன்வைக்கப்பட்ட சட்டம்தான் சேவை பெறும் உரிமை சட்டம்.

ஒவ்வொரு துறையிலும் இருக்கும் மக்கள் சாசனத்தின் (Citizen Charter) அடிப்படையில் ஒவ்வொரு சேவையையும் குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்கு வழங்க வேண்டும். அப்படி வழங்கத் தவறும் பட்சத்தில் அதற்கு தக்க காரணம் வழங்கப்பட வேண்டும். வழங்கப்பட்ட காரணம் சரியாக இல்லாத போது அதற்குக் காரணமான அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு அந்த தொகை மனுதாரருக்கு, சேவை கிடைக்கும் வரை ஒவ்வொரு நாளும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சேவை பெறும் உரிமை சட்டத்தின் சாராம்சம். மக்கள் நீதி மய்யமானது இச்சட்டத்தைச் செயல்படுத்த தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கடந்த 07.01.2022 அன்று கூட மய்யத்தின் தலைவர் அவர்கள் இதனை வலியுறுத்தி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

திமுகவும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் "நிர்வாக சீர்திருத்தம் " என்னும் தலைப்பின் கீழ் அறிக்கை எண் 19-ல் சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்ததோடு, ஆட்சிக்கு வந்த உடன் நடந்த முதல் கவர்னர் உரையிலும் சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்துவோம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த 10 மாத காலத்தில் இச்சட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்த முன்னெடுப்பும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை. ஏற்கனவே 21 மாநிலங்களில் செயல்பட்டுவரும் சட்டத்தை இனியும் காலதாமதப் படுத்துவது முறையல்ல என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துக் கொள்கிறது.

அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியர்கள் மாநாட்டில் பேசியது தன்னுடைய உளப்பூர்வமான பேச்சு என்று நம்பினால் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் மீண்டும் வலியுறுத்துகிறது. 

சேவைபெறும் உரிமைச் சட்டத்தை உடனே அமல்படுத்த வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை இன்று தமிழகமெங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இச்சட்டம் செயல்பாட்டுக்கு வரும்வரை மய்யத்தின் தொடர் வலியுறுத்தல்கள் தொடரும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM Party Petition for district collector


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->