வரலாறு காணாத மழையால் பரிதவிக்கும் விவசாயிகள் - சேதங்களை கணக்கெடுத்து உடனடியாக நிவாரணம் - மநீம! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்கள் குறித்து உடனடியாக கணக்கெடுத்து, உரிய நிவாரணம் வழங்கி, விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று. மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் Dr. G.மயில்சாமி விடுத்துள்ள அறிக்கையில், "வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம் மழையால் சின்னாபின்னமாகியிருக்கிறது. சீர்காழியில் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது. 

 

கனமழை காரணமாக டெல்டா பகுதி விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. குறிப்பாக,  மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேல் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன.

அதிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிப்புகள் மிகவும் அதிகம். கடும் மழை காரணமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், சுமார் 35 ஹெக்டேரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அமைச்சர்களே தெரிவித்துள்ளனர். சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விளைநிலங்கள் குளம்போல காட்சியளிக்கின்றன.

பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். 

வீடுகளில் இருந்து வெளியேறி, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும். மழையால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் சாலைகளைச் சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் பெரிதும் வேதனையடைந்துள்ளனர். ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, இந்தப் பேரிடரைத் தாங்கும் சக்தி கிடையாது. எனவே, பயிர் சேதம் தொடர்பாக உடனடியாக கணக்கெடுப்பு மேற்கொண்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். 

மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும். அதேபோல, வீடுகள் மற்றும் உடமைகளை இழந்தவர்களுக்கும் அரசு உதவ வேண்டும். பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு, தேவையான உதவிகளை கல்வித் துறையினர் செய்துகொடுக்க வேண்டும்.

தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். மீட்புப் பணிக்கான வீரர்களையும், உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவையான அளவுக்கு நிவாரண முகாம்களையும், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் இருப்புவைக்க வேண்டும்.

பேரிடர் தடுப்புப் பணிகளில் சிறிய அலட்சியம்கூட, பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, தமிழக அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளை விரைவுபடுத்தி, மழையால் மக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது."

இவ்வாறு அந்த அறிக்கையில் மயில்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MNM Say about rain flood 14112022


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->