தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், காவல் நிலையக் கொடுமைகள் குறித்தும் முதல்வரின் பதிலென்ன? - மக்கள் நீதி மய்யம் கேள்வி.! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர் சங்கர் அவர்கள் காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அந்த இளைஞருக்கு கவரப்பட்டி கிராமத்து பள்ளி வளாகத்தின் அருகில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தொடர்ச்சியாக சொல்லி வந்துள்ளனர். சுமார் 2 மாத காலமாக காவல்துறை உதவி எண் 100க்கு முயற்சித்து கடைசியாக விராலிமலை காவல் நிலையத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்ததாக அறிகிறோம்.

அழைத்த காவலர்கள் எங்கே சட்டவிரோத மது விற்பனை நடக்கிறது என்று விசாரிப்பார்கள் என்று நினைத்தால் புகார் கொடுத்த காரணத்திற்காக அவரை காலை 9 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அவரின் உடல்நிலை மோசமானதை அறிந்து அவரை வெளியில் அனுப்பி உள்ளனர்.

பள்ளிக்கூடத்தின் அருகே நடைபெற்றதாகக் கூறப்படும் கள்ளச்சாராய விற்பனை மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய விராலிமலை காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது.

மக்களுக்கு விசுவாசமாக, மாற்றுத் திறனாளிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய காவலர்களின்  மனிதத்தன்மையற்ற செயலை  மக்கள் நீதி மய்யம் கடுமையாகக் கண்டிக்கிறது. உள்ளூர் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்களின் தொடர் முயற்சியின் காரணமாக  சம்பந்தப்பட்ட காவல்நிலைய ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்;  காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது (FIRல்”.. வேணும்னா நீயும் சரக்கு வித்துக்கோ; முதலமைச்சரே (சாராய) பேக்டரி நடத்துகிறார், அதனைப்போய் நிறுத்து” என்று விராலிமலை காவல்நிலையக் காவலர்கள் மாற்றுத்திறனாளி சங்கரிடம் கேட்டதாகப் பதிவாகியுள்ளது. வழக்குப்பதிவிலும், சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்கத் தவறியதற்கான குற்றம் குறித்தான சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படவில்லை).

சிலவாரங்கள் கடந்தபின்பு, காவலர்கள் மீதான வழக்கு விரைவில் நீர்த்துப் போகச் செய்யப்படும், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ஆய்வாளர் வேறு காவல்நிலையத்திற்கு மாற்றப்படுவார். இதுபோலத்தான் பல சம்பவங்களில் நடந்துள்ளன. சட்டத்தைக் காக்கவேண்டிய காவலர்கள் கடுங்குற்றம் செய்தால், அதற்கான தண்டனை பணி இடமாற்றமோ, பணி இடைநீக்கமோ கிடையாது, உரியவிசாரணைக்குப் பின் உடனடி பணிநீக்கமே  என்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் அவசியமாகிறது. இல்லையேல், இதுபோன்ற காவல்நிலையக் கொடுமைகள் தொடர்ந்தவண்ணமே இருக்கும்!

சாத்தான்குளம் சம்பவம் உள்ளிட்ட எண்ணற்ற சம்பவங்களின் காரணமாக காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி) அவர்கள் தமிழகமெங்குமுள்ள காவல் நிலைய அலுவலர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல் கொடுத்துவருகிறார். அதில், புகார் கொடுக்க வருபவர்களிடம் சட்டப்படியும், மனிதாபிமானத்தோடும் நடந்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும், விராலிமலை காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.  

நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த நிதி அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் “நமது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில், 2 முதல் 3 சதவீதம் வரையிலான கசிவுகளால், பல்லாயிரக்கணக்கான கோடிகளை நாம் இழக்கிறோம். டாஸ்மாக் அமைப்பில் மட்டும் கசிவு 50% வரை உள்ளது” எனக் கூறியிருந்தார்.

திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் உணர்த்த விரும்பியது இது போன்ற மது விற்பனையையும் உள்ளடக்கியதுதான். கள்ளத்தனமாக சாராயம் விற்பதைத் தடுக்கவேண்டிய முக்கியப்பொறுப்பு மதுவிலக்கு காவல்துறையின் பணி. அரசாங்கம் செய்ய வேண்டிய அப்பணியை ஒரு பார்வை மாற்றுத்திறனாளி செய்யும்போது அவரைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, அவரை இதுபோன்ற சித்திரவதைக்கு உள்ளாக்குவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.  மனித உரிமை ஆணையமும், மாற்றுத்திறனாளிகள் ஆணையரகமும் இச்சம்பவத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், சங்கர் அவர்களைத் தாக்கும்போது, “நல்லது செய்ய நீ என்ன காந்தியா?” என்ற காவல் ஆய்வாளரின் கேள்வி ஒட்டுமொத்த தேசத்தையும் அவமானப்படுத்துவதாக உள்ளது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் முறையாக மதிக்கப்படுவார்களா?
காவல்நிலைய அநீதிகளைத் தடுக்க என்ன செய்யப்போகிறோம்?
புகாரளிப்போருக்குப் பாதுகாப்பு கிடையாதா?

டாஸ்மாக் முறைகேடுகள் குறித்துப் பேசிய நிதியமைச்சர் மற்றும்
காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரின் பதிலென்ன?"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mnm say about tn law and order issue 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->