சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடு - யாருக்குத் தெரியுமா?
restriction to without idumudi devotees in sabarimalai
சபரிமலையில் மாதபூஜை நாட்களில் இரு முடிகட்டு இல்லாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக கடந்த 14-ந் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது. 15-ந் தேதி முதல் மாத பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாத பூஜை நாட்களில் இருமுடி கட்டுடன் வரும் பக்தர்கள் கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய வசதியாக, இருமுடி கட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது மாத பூஜை நாட்களில் தினசரி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 1 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். இரு முடிகட்டு அல்லாத பக்தர்கள் காலை 6 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே இவர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும்.
இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சன்னிதானத்தில் கூடுதல் வசதிகளுடன் சாமி தரிசனம் செய்வதற்கான திட்ட பணிகள் நாளை தொடங்குகிறது. அதாவது, பக்தர்கள் கூட்டம் குறைவான நாட்களில் கொடி மரத்தை சுற்றி நேராக சாமி தரிசனம் செய்யவும், கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் மேம்பாலத்தில் ஏறி சென்று சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
restriction to without idumudi devotees in sabarimalai