உயிரைக் கொல்லும் இலஞ்சத்தை தடுக்க மக்கள் நீதி மய்யம் முன்வைக்கும் மூன்று தீர்வுகள்!
MNM say prevent life threatening bribery
மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "இலஞ்சம் உயிரையும் கொல்லும் என்பதற்கு உதாரணமாகி நிற்கிறது திருவாரூர் மணிகண்டன் அவர்களின் மரணம். கூரை வீட்டிலிருந்து இடம்மாறி குறைந்தபட்சம் 300 சதுர அடி கான்கிரீட் வீடு கட்டி வாழும் கனவோடு இருந்த 25 வயது இளைஞர் இன்று ஆறடி நிலத்திற்குள் அடங்கிக் கிடக்கிறார். காரணம் இலஞ்சம்! பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் கறாராக லஞ்சம் கேட்டதால் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுதக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மணிகண்டனை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். மணிகண்டன் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் நாம், வருங்காலத்தில் மேலும் பல “மணிகண்டன்கள்” உருவாவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் காணவேண்டும்.
கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே இலஞ்ச-ஊழலுக்கு எதிரான குரலாக மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து ஒலித்து வருகிறது. இலஞ்ச நோய் மேலும் ஒரு உயிரைக் காவு வாங்கியுள்ள இந்நேரத்தில் இலஞ்சத்தை ஒழிக்க மூன்று முக்கியத் தீர்வுகளை மய்யம் முன்வைக்கிறது.
முதலாவதாக, பாதிக்கப்படும் மக்கள் எளிமையாக புகாரளிக்கும் வசதி வேண்டும். காவல்துறை புகாருக்கு அவசர தொலைபேசி எண் 100 உள்ளதுபோல், மிக எளிதாக மக்கள் மனதில் நினைவில் நிற்கும் அவசர தொலைபேசி/வாட்ஸ் அப் புகார் எண்ணை அறிவித்து அனைத்து ஊடகங்கள் மூலமும் இதனை விளம்பரப்படுத்த வேண்டும். இலஞ்சப் புகாருக்கு ஏற்கனவே சில தொலைபேசி எண்கள் இருந்தாலும், அவை மக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்க்கப்படவில்லை. (சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் பொறுப்பேற்றதும் இப்படியொரு எண்ணை அவரே அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது). இந்த எண்ணிற்கு வரும் அழைப்புகளுக்கு ஒப்புகை எண் (Acknowledgement Number) கொடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பிரச்னையானது தீர்க்கப்படுவதற்கு தொடர் வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும்.
இரண்டாவதாக, புகார்களுக்கு விரைவாக தீர்வுகாண வேண்டும். இலஞ்சம் தொடர்பாக வரும் புகார்களுக்கு விரைந்து தீர்வுகாணும் வகையில் இலஞ்ச-ஊழல் ஒழிப்புத்துறைக்கு (DVAC) கூடுதல் பணியாளர்கள், நிதிஒதுக்கீடு, தொழில்நுட்ப வசதிகள் செய்துதரப்படவேண்டும். 500 ரூபாய் இலஞ்சப்புகாரைத் தீர்த்துவைக்க 5 ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும் என்ற நிலை இருந்தால் யாரும் புகாரளிக்க வரமாட்டார்கள். இலஞ்சப் புகார் நிரூபிக்கப்பட்டால் பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும். மேலும், உயர்மட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் மீதான புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்பொருட்டு “லோக் ஆயுக்தா” சட்டம் வலுப்படுத்தப்படவேண்டும்.
மூன்றாவதாக, அரசு சேவைகள் அனைத்தும் குறித்த காலத்திற்குள் வழங்கப்படுவதற்கு வழிவகை செய்யும் “சேவை உரிமைச் சட்டம்”(Right to Services Act) உடனடியாக அமல்படுத்தப்படவேண்டும். காலதாமதமின்றி, அலைந்து திரியாமல் அரசுசேவைகள் கிடைக்கும் என்ற நிலை வந்துவிட்டால், இலஞ்சம் கணிசமாகக் கட்டுப்படுத்தப்படும். குறிப்பாக, மக்களுக்கு விரைவான சேவை தரும் அரசு அலுவலர்களுக்கு கூடுதல் சலுகைகள், விரைவான பணி உயர்வு வழங்கப்படுதலும்; அரசு சேவைகள் தாமதிக்கப்பட்டால், அத்தாமதத்திற்குக் காரணமானவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற நடைமுறையையும் அனைத்துத் தரப்பினரின் விரிவான கலந்தாலோசனைக்குப் பின் அமல்படுத்தினால் இலஞ்சத்தைக் கட்டுப்படுத்தலாம்.
இந்த மூன்று நடவடிக்கைகள் மட்டுமே, ஒட்டுமொத்த இலஞ்சப் பிரச்னையையும் தீர்த்துவிடும் என்று சொல்வதற்கில்லை. நீண்டகால அடிப்படையில் செய்யப்பட
வேண்டிய சமூக விழிப்புணர்வு உள்ளிட்ட இன்னும், ஆழமான தீர்வுகளை நோக்கி நகரவேண்டியது அவசியம்தான். மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இலஞ்சத்தால் ஒரு இளம் உயிர் பறிபோகியுள்ள இன்றைய சூழலில், உடனடியாக அமல்படுத்தும் வாய்ப்புள்ள மேற்கண்ட இலஞ்சத் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு கவனம் செலுத்தவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது."
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
English Summary
MNM say prevent life threatening bribery