பாமகவின் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம்.! நேரடியாக களத்தில் இறங்கிய Dr. அன்புமணி இராமதாஸ்.!
NLC Issue Dr Anbumani Ramadoss In Neiveli
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன சுரங்கங்களின் விரிவாக்கம், புதிய சுரங்கங்கள் என்ற பெயரில் கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் மனிதநேயமற்ற செயல்கள் தொடர்கின்றன. தொழில்மயம் என்ற பெயரில் பூர்வகுடிமக்களின் நிலங்களை பறித்து, வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை வீடற்ற நாடோடிகளாக மாற்றும் முயற்சியை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரின் அறிக்கையில், "இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வளர்ச்சியடைந்திருக்கிறது. என்.எல்.சி நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான 37,256 ஏக்கர் நிலங்களை வழங்கிய மக்கள் தான்.
மக்களின் நிலங்களை மூலதனமாக வைத்து என்.எல்.சி நிறுவனம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அதற்குக் காரணமான மக்கள் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருப்பதற்கு பதிலாக, தொழிலாளர்களாகக் கூட பணியில் சேர முடியாமல், தவித்துக் கொண்டிருக்கின்றனர். என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலங்களைக் கொடுத்தவர்களில் பெரும்பான்மையினர் வாழ்க்கைச் செலவுக்குக் கூட வழியின்றி வாடுகின்றனர்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளூர் மக்களின் நலன்களை பாதுகாக்க ஒருபோதும் விரும்பியதில்லை என்பது அனைவரும் அறிந்தது தான். அந்த நிறுவனத்தால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களின் பாதுகாவலனாக பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. நெய்வேலி முதல் இரு நிலக்கரி சுரங்க விரிவாக்கம்; மூன்றாவது நிலக்கரி சுரங்கம் ஆகியவை குறித்த மக்களின் கோரிக்கைகள், நிலைப்பாடுகளை மத்திய, மாநில அரசுகளுக்கு கொண்டு சென்று தீர்வு காணவும், அதற்காக கடுமையாக போராடவும் பா.ம.க. தயாராக இருக்கிறது.
என்.எல்.சி நிறுவனத்தால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பதற்கான இயக்கத்தின் முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படக்கூடிய மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகளை அறிய முடிவு செய்திருக்கிறேன். அதற்காக கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி, கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவரப்பூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 11.00 மணிக்கு சிறுவரப்பூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் தொடங்கியுள்ளது.
இந்த கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்று மக்களின் கருத்துகளை அறிந்து, மக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் உள்ளிட்ட பா.மக.வின் துணை அமைப்புகள் கலந்து கொள்ளும். பொதுமக்களும், வேளாண் பெருங்குடி மக்களும் பெருமளவில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
NLC Issue Dr Anbumani Ramadoss In Neiveli