தொகுதி மறுசீரமைப்பு வேண்டாம், அமித்ஷாவின் உறுதிமொழி நம்பகத்தன்மையற்றது; சித்தராமையா..!
No to constituency reorganisation Siddaramaiah
பா.ஜ.,வின் ஆதிக்கத்தை எதிர்ப்பதால் தென் மாநிலங்களின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்த மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பை கருவியாக பயன்படுத்த விரும்புகிறது,'' என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கோவையில் பா.ஜ., அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ''தன்னுடைய ஆட்சியின் அவலங்கள் வெளிப்படக்கூடாது என்பதற்காக, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் புதிய பிரச்னைகளை உருவாக்கி, மக்களை திசை திருப்புகின்றனர்.'' என்று குறிப்பிட்டார்.

அத்துடன், ''மறுசீரமைப்பு என்ற புதிய பிரச்னையை உருவாக்கி, கட்சிகளுடன் முதல்வர் கூட்டம் நடத்துகிறார். தென் மாநிலங்களில் லோக்சபா தேர்தலில், ஒரு சீட் கூட குறையாது என, பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ஆனால், தமிழக முதல்வர், தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பொய் சொல்லி துரோகம் இழைக்கிறார்,'' என அமித்ஷா மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உறுதிமொழி நம்பகத்தன்மையற்றது.தவறாக வழிநடத்தக்கூடியது. துல்லியமான தகவல் இல்லாததன் காரணமாக அவர் இவ்வாறு பேசியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கர்நாடகா, தெலுங்கானா, தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களை குறைத்து மதிப்பிடும் திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம். பா.ஜ.,வின் ஆதிக்கத்தை எதிர்ப்பதால், தென் மாநிலங்களின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்த மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பை ஒரு கருவியாக பயன்படுத்த விரும்புகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முந்தைய தொகுதி மறுசீரமைப்பு பணிகள் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நியாயம் அளிப்பதாகவும், தென் மாநிலங்களின் வளர்ச்சி முயற்சிகளை அங்கீகரிப்பதாகவும் இருந்தது. தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு மேற்கொள்ளக்கூடாது. தற்போது உள்ள அளவை அப்படியே தொடர வேண்டும் என்று அந்த அறிக்கையில் சித்தராமையா கூறியுள்ளார்.
English Summary
No to constituency reorganisation Siddaramaiah