அரசு நலத் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பதையும், வரிகள் உயர்த்தப்படும் என்பதையும் சூசகமாக அறிவித்துள்ள தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்பதற்காக வாக்குறுதிகளை அள்ளி, அள்ளி வீசி, அதன்மூலம் ஆட்சியைப் பிடித்த தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை எப்படி தட்டிக் கழிப்பது என்பது குறித்தும், தட்டிக் கழிக்க முடியாத இனங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையை எப்படி குறைப்பது என்பது குறித்தும், மக்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை எப்படி சுமத்தலாம் என்பது குறித்தும் சிந்தித்துக் கொண்டே வருகிறது என்பது மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களின் பதிலுரையிலிருந்தும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் பேட்டியிலிருந்தும் தெளிவாகத் தெரிகிறது.
2022-2023 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு ஏழை மாநிலம் இல்லை என்றும், 52 விழுக்காடு மாணவர்கள் கல்லூரியில் சேர்வதை வைத்தே இது தெளிவாகிறது என்றும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், மிக்சிகன் . பல்கலைக்கழகம், ஜெ.பால், எம்.ஐ.டி. ஆகிய அமைப்புகள் சேர்ந்து செய்த ஆராய்ச்சியில், தமிழ்நாட்டில் 90 விழுக்காடு குடும்பங்களுக்கு மேல் கைபேசி வைத்திருக்கிறார்கள் என்றும், 75 விழுக்காடு மக்கள் சொந்த வீடுகளில் இருக்கிறார்கள் என்றும், இது ஊரகப் பகுதிகளில் 90 விழுக்காடாகவும், நகர்ப்புறப் பகுதிகளில் 60 விழுக்காடாகவும் இருக்கிறது என்றும், இவர்களில் 14 விழுக்காடு குடும்பங்கள்தான் அரசாங்கம் கட்டிக் கொடுத்த வீடுகளில் இருக்கிறார்கள் என்றும், 66 விழுக்காடு வீடுகளில் இருசக்கர வாகனம் இருப்பதாகவும், சில வீடுகளில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன என்றும், 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அளித்த தரவுகளில் உண்மை இருக்கலாம். அதை நான் மறுக்கவில்லை . அதே சமயத்தில், வீடுகள், இருசக்கர வாகனங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் வாங்குவோரில் கிட்டத்தட்ட 95 விழுக்காடு நபர்கள் கடன் வாங்கித் தான் வாங்குகிறார்கள் என்பதையும், அந்தக் கடனை அடைக்க முடியாமல் எத்தனைக் குடும்பங்கள் சிரமப்படுகின்றன என்பதையும், எத்தனை வீடுகள், வாகனங்கள் வங்கிகளால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விடப்படுகின்றன என்பதையும், கடன் கட்ட முடியாமல், ஜப்தி நடவடிக்கையின் காரணமாக எத்தனை உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்பதையும் மாண்புமிகு அமைச்சர் அவர்களால் குறிப்பிடப்படும் ஆராய்ச்சியில் தெரியவில்லை போலும்.
கைபேசியை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார் மாண்புமிகு அமைச்சர் அவர்கள். இன்றைக்கு கைபேசி இல்லை என்றால் படிக்கவே முடியாத சூழ்நிலை நிலவுகிறது. கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றக் காலத்தில், வசதி இல்லாத பெற்றோர்கள்கூட, வேறு வழியின்றி கடன் வாங்கி கைபேசிகளை தங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்தனர் என்பதுதான் யதார்த்தம்.
இதுபோன்ற தகவல்களை மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் - அளிப்பதற்குக் காரணம், தி.மு.க. அரசினால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைவருக்கும் கிடைக்காது என்பதை மறைமுகமாக தெரிவிப்பதற்காகத்தான் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
தமிழ்நாடு ஏழை மாநிலம் இல்லை என்று சொன்னதோடு மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் நின்றுவிடவில்லை . மேலும் அவர் பேசுகையில், பிற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், கட்டணத்தில், அதாவது fees-ல் இருந்து வருகின்ற வருமானம் 5 விழுக்காடு, 10 விழுக்காடு, 20 விழுக்காடு என்றுதான் இருக்கிறது என்றும், சொத்து வரி, தொழில் வரி, பதிவுக் கட்டணம், வணிக வாகனங்களுக்கான கட்டணம் என எதுவுமே உயர்த்தப்படவில்லை என்றும், இவற்றை சரி செய்தால்தான் நன்றாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். மாண்புமிகு நிதி அமைச்சர் பேச்சிலிருந்து, இனி வருங்காலங்களில், நலத் திட்ட உதவிகளுக்கான பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பதோடு, வரிகளும் உயர்த்தப்படும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், அரசு அதிகாரிகள் அதிக சம்பளம் கேட்பதால் பால் விலை, பேருந்துக் கட்டணம் ஆகியவற்றில் சிறிதளவு மாற்றம் இருக்கும் என்றும், அதை தி.மு.க. திணிக்கவில்லை என்றும், அந்தந்த காலக்கட்டங்களுக்கு ஏற்ப உயருவது இயல்பான ஒன்றே என்றும், இவை குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பார் என்றும் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு நிதி அமைச்சர் ஆகியோரின் பேச்சுக்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் - வாழ்வாதாரத்தினை பெரிதும் பாதிக்கும் செயல், பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்டு, இன்றைக்கு அவற்றை ஒரு சம்பிரதாயத்திற்காக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அரசு நலத் திட்டங்களுக்கான பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் - 1 நடவடிக்கையினையும், மின்சார கட்டணம், பேருந்துக் கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, முத்திரைக் கட்டணம், உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தும் முயற்சியினையும் மேற்கொண்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படாதவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் நாட்டை இழப்பார் என்ற வள்ளுவரின் வாய்மொழியை மனதில் நிலைநிறுத்தி அதற்கேற்ப ஆட்சி புரிய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.