தலைமை செயலகத்திலிருந்தே தமிழக அரசுக்கு வந்த கண்டனம்! பின்வாங்குவாரா முதல்வர் ஸ்டாலின்?!
DMK Govt Order Govt staff condemn
ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூல கணக்குத்துறையுடன் இணைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு தலைமைச் செயலக சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அசசாங்கத்தின் செய்திக்குறிப்பில், மறுசீரமைப்பு என்ற பெயரில் ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் தகவல் தொகுப்பு மையம் கருவூல கணக்குத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதற்கான அரசாணையை நிதித்துறை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, இரு துறைகளின் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. அதோடு ஓய்வூதிய இயக்குநரகம் ஒழிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும், ஓய்வூதியர் இருந்தால் அவர்களுக்கு குடும்ப பாதுகாப்பு வழங்குவதற்கும் ஓய்வூதிய இயக்குநரகத்தால் மாவட்டம்தோறும் நடத்தப்படும் ஓய்வூதியர் அதாலத் அனைத்தும் இனிமேல் கருவூல கணக்குத்துறை ஆணையரகத்தால் கூடுதலாக நிர்வகிக்கப்படும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு நிறைவேற்றாது என்பதற்கு கட்டியம் கூறும் வகையில் ஓய்வூதிய இயக்குநரக இணைப்பு நடவடிக்கை அமைந்துள்ளது. 1.4.2003-க்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்து பங்களிப்பு ஓய்வூதிய
திட்டத்தில் உள்ளோருக்கு ஓய்வூதியம் என்பது இனிமேல் கானல் நீர் தான் என்பதை இந்த அரசாணை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
தொடர் தாக்குதல்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்திவரும் திமுக அரசின் தற்போதைய நடவடிக்கை, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. மத்திய அரசு கூட தனது ஊழியர்களின் ஓய்வூக்கால நலனைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என கொண்டுவந்து 50 சதவீதம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு எந்த தருணத்திலும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாது என்பதையே நிதித்துறையின் இந்த அரசாணை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த விஷயத்தில் முதல்வர் உடனடியாகத் தலையிட்டு நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்து விட்டு, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முன்வர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
DMK Govt Order Govt staff condemn