அரசு தணிக்கைத் துறைகளை தனியாருக்கு தாரை வார்க்க வித்திட்டு இருக்கும் தி.மு.க அரசு.. ஓ.பி.எஸ் கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


அரசு தணிக்கைத் துறைகளை தனியாருக்கு தாரை வார்க்க வித்திட்டு இருக்கும் தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தப் பொருளாக இருந்தாலும், கி.மு., கி.பி., என்பதுபோல், ஆ.மு., ஆ.பி., அதாவது, ஆட்சிக்கு முன்பு, ஆட்சிக்கு பின்பு என்பதில் தொடர்ந்து உறுதியான நிலைப்பாட்டினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடைபிடித்து வருகின்றார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிதி, வருவாய், மேலாண்மை, கூட்டுறவு, சாலைப் போக்குவரத்து, சுற்றுச்சூழல், வனம் ஆகிய துறைகளில் தனியார் துறையில் பணிபுரிபவர்களை இணைச் செயலாளர் நிலையில் அமர்த்த மத்திய அரசு விண்ணப்பங்களை வரவேற்றது. அப்போது அதனை எதிர்த்து குரல் கொடுத்ததோடு, இந்த முடிவு பணிபுரியும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை இழிவுபடுத்துவது போன்றது என்று தெரிவித்து, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்தச் செயலினை பாரதிய ஜனதா கட்சி அல்லாத மாநில முதலமைச்சர்கள் எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது எதை எதிர்த்துக் குரல் கொடுத்தாரோ, அதற்கு இப்போது அஸ்திவாரம் போட்டு இருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். 21-06-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் படிக்கப்பட்ட மேதகு ஆளுநர் உரையில், "தணிக்கை, கண்காணிப்பு செயற்பாடுகள் ஆகியவை முழுவதுமாக சீர்செய்யப்பட வேண்டுமென இந்த அரசு கருதுகிறது" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை நிறைவேற்றும் வண்ணம், மாநில அரசின் தற்போதைய அனைத்து தணிக்கை துறைகளையும் மேற்பார்வையிட மாநில தணிக்கை இயக்குநர் என்ற பதவி உருவாக்கப்படும் என்றும், இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குப் பணி சேவையைச் சார்ந்த அலுவலரை மாற்றுப் பணியில் மாநில தணிக்கை இயக்குநராக நியமிப்பது உசிதமானது என்றும் 2021-2022 ஆம் ஆண்டு நிதித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இவற்றிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், அரசாணை எண். 102 நாள் 07-04-2022 நிதித் துறையால் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆணையில் தணிக்கை தலைமை இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டு அதற்கான நெறிமுறைகளும், வரையறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நியமிக்கப்படும் தணிக்கை தலைமை இயக்குநர் நிதித் துறையின் நிர்வாகத்தின்கீழ் இயங்கும் உள்ளாட்சி நிதித் தணிக்கை, கூட்டுறவு தணிக்கை, பால் கூட்டுறவுகளின் தணிக்கை, மாநில அரசு தணிக்கை, இந்து சமய நிறுவனங்களின் தணிக்கை உள்ளிட்ட தணிக்கைத் துறைகளை மேற்பார்வையிட வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேற்படி ஆணையின் பத்தி 3 A-ல், இந்தியத் தணிக்கை மற்றும் - - கணக்குப் பணியைச் சார்ந்தவரை மாற்றுப் பணியிலோ அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியையோ தணிக்கை தலைமை இயக்குநர் பதவிக்கு நியமிக்கலாம் என்று குறிப்பிட்டுவிட்டு, பத்தி 3 B-ல் பொதுத் துறை அல்லது தனியார் துறையில் நல்ல அனுபவம் ' பெற்றவரையும் தணிக்கை தலைமை இயக்குநர் பதவிக்கு நியமிக்கலாம் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.

மேற்படி ஆணையின் பத்தி 5 (vii}-ல், தணிக்கை தலைமை இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள தனியார் தணிக்கை நிறுவனங்களை நியமித்துக் கொள்ள தணிக்கை தலைமை இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு முதலமைச்சரின் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், மேற்படி இரண்டு பிரிவுகளுமே இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல் என்பதோடு மட்டுமல்லாமல் தற்போது பணியில் உள்ள அரசு ஊழியர்களையும், இந்திய ஆட்சிப் பணி - அதிகாரிகளையும் அவமானப்படுத்தும் செயல். இது மட்டுமல்லாமல், ஆட்சியாளர்களுக்கு வேண்டிய தனியரை பெரிய பதவியில் அமர்த்தவும், வருங்காலங்களில் நிதித் துறை நிர்வாகத்தின்கீழ் இயங்கும் தணிக்கை துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர்களை நியமிக்காமல், தனியார் தணிக்கை நிறுவனங்களை வைத்தே தணிக்கைப் பணிகளை முடிக்கவும் தி.மு.க, அரசு திட்டமிடுகிறது என்பது தெளிவாகிறது. இது அரசு ஊழியர்களுக்கு எதிரான செயல் என்பதோடு, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சிக்கு வித்திடும் நடவடிக்கை.

மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க., எப்படி முற்றிலும் பி.எஸ்.என்.எல். என்கிற தொலைதொடர்பு நிறுவனத்தை ஒழித்துக் கட்டியதோ, அதேபாணியில், தமிழ்நாட்டில் உள்ள தணிக்கை துறைகள் மற்றும் நிறுவனங்களை ஒழித்துக் கட்ட தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று இந்தத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தணிக்கைத் - துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் தி.மு.க.வின் முயற்சிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் , கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அன்று மத்திய அரசை எதிர்த்த மாண்புமிகு முதலமைச்சர், இன்று அதே பாணியை கடைபிடிப்பது அவருடைய இரட்டை வேடத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு, மாண்புமிகு முதலமைச்சரின் இந்தச் செயல் இளைய சமுதாயத்தின் எதிர்கால நலனை பாதிக்கும் செயல், எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தனியர் ஒருவரை நேரடியாக மாநில தலைமை தணிக்கை இயக்குநர் பதவிக்கு நியமிக்கவும், அரசுத் துறை மற்றும் அரசு நிறுவனங்களின் தணிக்கையை தனியார் தணிக்கை நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளவும் வழிவகை செய்யும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Statement on apr 9


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->