#தமிழகம் || குளக்கரையில் 3 கோவில்களை இடிக்க முயன்ற அதிகாரிகள்., போராட்டம் - போலீஸ் குவிப்பு.!
PALLAPALAYAM HINDU TEMPLES ISSUE
நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து கோவில் மற்றும் 20 வீடுகள் கட்டப்பட்டு இருந்ததை அகற்றுவதற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த பள்ளபாளையம் கிராமத்தில் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள செட்டியார் குளத்திற்குச் செல்லும் நீர் வழிப் பாதையை ஆக்கிரமித்து 3 கோவில்கள், 20 வீடுகள் கட்டப்பட்டு உள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் 20 வீடுகளையும், 3 கோவில்களையும் அகற்ற நோட்டீஸ் வழங்கினர்.
வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், கருவண்ணராயர் வீர சுந்தரி கோவில், கருப்பராயன் கோவில், வீரமாச்சி கோவில் ஆகிய 3 கோவில்களை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்து அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் ஒன்று திரண்டு கோவில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் 500க்கும் மேற்பட்ட போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்து கோவிலை இடிக்க முயற்சித்தனர்.
பொதுமக்களில் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அத்துடன் தேங்காய் மட்டைகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தி போலீசாரிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.
இந்த கோவில் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், 500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோவில் இருப்பதாகவும், இந்த கோவிலில் இருப்பதால் குளத்தின் நீர் வழிப்பாதைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிகாரிகள் இந்த கோவில்களை இடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளனர். நீர் வழிப் பாதையில் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் அந்த வீடுகளை அகற்றியும் விட்டனர். ஆனால் கோவில்களை இடிக்க வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கேட்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் பாஜக சார்பாகவும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
English Summary
PALLAPALAYAM HINDU TEMPLES ISSUE