'கூட்டணி வைக்க தயார்; ஆனால், அவர்கள் இதை செய்யவேண்டும்'; தி.மு.க., கூட்டணி தலைவர்களுக்கு சவால் விட்ட சீமான்..! - Seithipunal
Seithipunal


ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் மற்றும் தமிழகத்தில் நடக்கும் கொலைகள் பற்றிய கேள்விக்கு தி.மு.க., வில் கூட்டணி வைத்திருக்கும் ஒரே ஒரு தலைவர் பதில் சொல்லிவிட்டால் நான் அவர்களுடன் கூட்டணி வைக்கிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக கூறியுள்ளார்.

சிவகங்கையில் நிருபர்கள் சந்திப்பின் போதே சீமான் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்; ''நல்ல ஆட்சி வரவேண்டும். நல்ல அரசியல் வரவேண்டும் என்று நினைக்கக்கூடிய பெருமக்கள் என்ன சொல்ல வேண்டும் என்றால், கூட்டணி இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என்று சொல்லக்கூடாது, கொள்கை இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என்று தான் கேட்க வேண்டும். கூட்டணி வைத்து வென்று போனவர்கள் சட்டசபையிலும், பார்லிமென்டிலும் படுகிற பாடை நீங்கள் பார்க்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், அவர் அங்கு பேசுகையில்; ''நான் சுதந்திரமாக நீங்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் இப்படி பேசிக் கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் ஒரு தலைவரை இப்படி உட்கார்ந்து, நீங்கள் ஒரே கொலையா நடக்கிறது.. ரூ.ஆயிரம் கோடி ஊழல் என்ற கேள்விக்கு தி.மு.க., வில் கூட்டணி வைத்திருக்கும் தலைவர்கள் பதில் சொல்லிவிட்டால் நான் கூட்டணி வைக்கிறேன். அதாவது நாட்டு மக்கள் எல்லா உரிமையும் பெற வேண்டும் என்று போராட வந்துவிட்டு, நானே சுதந்திரத்தை இழந்து விட்டு நின்று விட்டேன் என்றால்? நீங்களே பார்த்தீர்கள் பாண்டே நிகழ்ச்சியில் நானும், செங்கோட்டையனும் பங்கேற்றோம்.

நிகழ்ச்சியில் நான் நினைக்கிறது எல்லாம் பேசினேன். அவரே அதாவது ( செங்கோட்டையன்) சொல்கிறார் சீமான் நினைக்கிறதெல்லாம் பேசுகிறார். நான் சிக்கலில் இருக்கிறேன் என்று.  அவ்வளவு பெரிய தலைவரே இக்கட்டில் இருந்தால், நாடும் மக்களும் எப்படி இருப்பது..? கூட்டணி வைக்காமல் முப்பத்தாறு லட்சம் மக்கள் ஓட்டு போட்டு உள்ளார்கள். 2026-இல் இதே 62 ஆக மாறினால் என்ன செய்வீர்கள்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ''அதிகாரத்திற்கு வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார்கள். வந்து மக்களுக்கு என்ன கொடுத்திருக்கிறார்கள்? நான் அதிகாரத்தை வெல்லவில்லை, ஆனால், நான் சொல்வது நடக்கிறதா இல்லையா..? வீட்டை இடித்து விடு பார்ப்போம் என்கிறேன். விவசாய நிலத்தை எடுத்து பார் என்கிறேன். பரந்தூரில் விமான நிலையத்தை கட்டிப்பார் என்றேன். அவர்களால் முடியவில்லை. இந்த துணிவோடு கூட்டணி வைத்து அதிகாரத்தில் உட்கார்ந்து இருப்பவர்களால் பேச முடிகிறதா..? முடியவில்லை. தனியாக நின்று வெல்ல முடியாது என்று பேசாதீர்கள். கெஜ்ரிவாலால் முடிகிறது என்னால் முடியாதா..? 2014-இல், ஜெயலலிதா தனியாக நின்று பார்லிமென்டில் 37 இடங்களில் வென்றார்.'' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ''நீங்கள்  உடனே அவசரப்படாதீர்கள். மரம் வைத்து தண்ணீர் ஊற்றி உரம் போட்டு வளர்க்கிற நானே உடனே காய்க்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. நான் தோற்றுவிட்டேன். வலுவான கட்டடத்தை கட்டி விட்டு போகிறேன். என் தங்கச்சி வந்து வென்று விட்டு வாழ்ந்துட்டு போகிறார். என் முன்னோர்கள் செய்யவில்லை. நாங்கள் செய்துவிட்டு போகிறோம். உடனே வர வேண்டும் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை.'' என்று நிருபர்களிடம் சீமான் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ready to form an alliance but they have to do this Seeman challenges DMK and alliance leaders


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->