7 நாள் ஆச்சு! கள்ளக்குறிச்சி சோளக்காட்டில் இளம்பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்! இது நாடா, சுடுகாடா? கொந்தளிப்பில் அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt Kallakurichi case
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த திம்மாவரம் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் கொடிய முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தக் கொடூரம் நிகழ்ந்து 7 நாட்களுக்கு மேலாகும் நிலையில், அதற்குக் காரணமான மனித மிருகங்களைக் கைது செய்ய தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சின்னசேலத்தை அடுத்த திம்மவரத்தைச் சேர்ந்த நிர்மலா என்பவர் கடந்த திசம்பர் 26-ஆம் தேதி இரவு 7 மணிக்கு அவரது வீட்டிற்கு அருகில் உள்ள கூட்டுறவு பால் சங்கத்திற்கு பால் விற்பனை செய்வதற்காக சென்றிருக்கிறார். ஆனால், அன்றிரவு அவர் வீடு திரும்பாத நிலையில், அடுத்த நாள் காலையில், அங்குள்ள சோளக்காட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் கொடியவர்கள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், நிர்மலா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு 7 நாட்களுக்கு மேலாகும் நிலையில், குற்றவாளிகள் யார் என்பது இதுவரை அடையாளம் கூட காணப்படவில்லை என்றும், அதற்கான முயற்சிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தீவிரம் காட்டவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு வேதனையான எடுத்துக்காட்டு நிர்மலாவின் படுகொலை ஆகும். சின்னசேலத்தை அடுத்த திம்மவரம் சிறிய கிராமம் ஆகும். அங்கு வீட்டிலிருந்து மிகக் குறைந்த தொலைவில் உள்ள கூட்டுறவு பால் சங்கங்த்திற்கு சென்று திரும்புவதற்குள் ஒரு பெண்ணை கொடிய மிருகங்கள் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்திருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று தான் பொருள் ஆகும்.
கொலை நடந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை என்றால் காவல்துறையினர் அவர்களின் அடிப்படையான புலனாய்வுத் திறனை இழந்து முடங்கிக் கிடக்கின்றனர் என்று தான் தோன்றுகிறது. பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படும் கொடிய நிகழ்வுளில் சில அறிவியல்ரீதியிலான ஆய்வுகளும், ஆதாரம் திரட்டும் பணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்கும் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அவை திரட்டப்படவில்லை என்றால் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது மிகவும் கடினமாகி விடும்.
புலனாய்வுக்கு உதவும் வகையில் ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் வந்து விட்ட நிலையில், ஒரு கொடிய குற்றத்தை செய்தவர்களை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நம்பும்படியாக இல்லை. குற்றவாளிகளை தப்ப வைக்க சதி நடக்கிறதோ? என்ற ஐயம் தான் எழுகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் கொடியவன் ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் ஏற்பட்ட பதற்றமும், வேதனையும் இன்னும் விலகவில்லை. அதற்குள்ளாக அதைவிட கொடிய நிகழ்வு சின்ன சேலத்தில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
அதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டிய காவல்துறையும், தமிழக அரசும் அதை மூடி மறைக்க முயல்வது வெட்கக் கேடான விஷயங்கள் ஆகும். இதற்காக அவை தலைகுனிய வேண்டும். இவற்றை வைத்து பார்க்கும் போது நாம் வாழ்வது நாடா, சுடுகாடா? என்ற ஐயம் தான் எழுகிறது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதற்கு முதன்மைக் காரணம் மதுவும், கஞ்சா, அபின், மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்களும் 24 மணி நேரமும் தடையில்லாமல் கிடைப்பது தான். இரண்டாவது காரணம் காவல்துறை அதன் செயல்திறனை இழந்து விட்டது தான். கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த பல கொடிய குற்றங்களில் காவல்துறையினரால் துப்புதுலக்க முடியவில்லை. இத்தகைய வழக்குகளின் பட்டியல் மேலும், மேலும் நீண்டு கொண்டே செல்கிறது.
இத்தகைய தோல்விகள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டியது காவல் உயரதிகாரிகள் மற்றும் அத்துறையை கவனிக்கும் முதலமைச்சரின் கடமை ஆகும். ஆனால், இதுபோன்ற வழக்குகளில் ஆலோசனை வழங்குவது ஒருபுறம் இருக்கட்டும்... இத்தகைய செய்திகளை அறிந்து கொள்வதற்குக் கூட முதலமைச்சர் விரும்புவதில்லை என்பது தான் உண்மையாகும்.
ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டைக் கூட 2023 அக்டோபர் மாதத்திற்கு பிறகு முதலமைச்சர் நடத்தவில்லை. தமிழ்நாட்டில் தேனும், பாலும் ஆறாக ஓடுகின்றன; மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் என்ற பொய்யைத் தவிர வேறு எதையும் கேட்க விரும்பாத மாய உலகில் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட முதலமைச்சரை பெற்றதற்கு தமிழ்நாடு என்ன புண்ணியம் செய்ததோ தெரியவில்லை.
தமிழகத்தில் இப்போது நிலவும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இனியும் தொடரக்கூடாது. திம்மவரத்தில் நிர்மலா பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும், இனிவரும் காலங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட நிர்மலாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், முறையே 4, 3 வயது கொண்ட குழந்தைகள் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். அவர்களில் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளையும் தமிழக அரசு வழங்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt Kallakurichi case