திமுக தொடர்பு வெளிவராமல் தடுக்க துடிப்பது ஏன்? சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதா? அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கருணாபுரம்  பகுதியில் கடந்த ஜூன் மாதம்  நச்சு சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின்  விசாரணையை சிபிஐக்கு மாற்றி  சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. 

கள்ளச்சாராய சாவு வழக்கில் உண்மைகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன்  தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம், கள்ளச்சாராய சாவு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த நவம்பர் 20-ஆம் தேதி தீர்ப்பளித்தது.  

அடுத்த இரு வாரங்களில் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. 

ஆனால், வழக்கு விசாரணையை சி.பி.ஐயிடம்  ஒப்படைக்காத  தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான விவகாரத்தில் திமுக அரசு எந்தத் தவறும் செய்யவில்லை; சட்டப்படி தான் செயல்பட்டது என்றால்  வழக்கை சி.பி.சியிடம் ஒப்படைப்பதில் எந்தத் தயக்கமும் இருக்கத் தேவையில்லை. மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் தேவையில்லை.  

ஆனால், இந்த வழக்கில் அவசர அவரசமாக மேல்முறையீடு செய்திருப்பதன் மூலம், கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியது, அதற்கு மறைமுகமாக ஆதரவளித்தது உள்ளிட்ட உண்மைகள் வெளிவந்து விடுமோ? என்று திமுக அரசு அஞ்சுவதை புரிந்து கொள்ள முடிகிறது. 

கள்ளச்சாராய வழக்கை  சிபிஐ விசாரணைக்கு மாற்றி பிறப்பித்த ஆணையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகவும் முக்கியமானவை.  கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் கவனத்திற்கு வராமல்  கள்ளச்சாராயம்  விற்பனை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது; 

கள்ளச்சாராய விற்பனையை தமிழக காவல்துறை கண்டும் காணாமலும் இருந்ததைத் தான் இது காட்டுகிறது; கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான காவல்துறை  அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு திரும்பப் பெற்றது தவறு  என்றெல்லாம் கண்டனக் கணைகளை நீதிபதிகள் தொடுத்திருந்தனர்.

 கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் திமுகவின் நிர்வாகிகளும்,  சட்டப்பேரவை முன்னாள், இந்நாள்  உறுப்பினர்களும் தான்  முழு ஆதரவாக இருந்திருக்கின்றனர் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு ஆகும். 

இப்போது நீதிபதிகள் எழுப்பியுள்ள வினாக்கள் பா.ம.க.வின் குற்றச்சாட்டுகள் சரியானவை என்பதை உறுதி செய்திருந்தன.  

உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டால், இந்த உண்மைகள் அனைத்தும் வெளிவந்து விடும்  என்ற அச்சம் தான் மேல்முறையீட்டுக்கு காரணம் ஆகும்.

சில தவறுகளை சில காலம் மறைக்கலாம்; பல குற்றங்களை பல காலம் மறைக்கலாம்; ஆனால், எல்லா தவறுகளையும், குற்றங்களையும் எல்லா காலத்திற்கும் மறைக்க முடியாது.  

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தாலும் கூட, அதிலும் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.  

சற்று தாமதமாகவேனும்  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படும். இது உறுதி" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss Kallakurichi Kallasarayam CBI Case DMK MK Stalin Govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->