முதல்வரிடம் வன்னியர் உள் ஒதுக்கீடு கேட்டு மனு கொடுக்க தடை! இது தான் திமுக அரசின் சமூகநீதி காக்கும் லட்சனமா? கொந்தளிக்கும் அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயித்தியாகம் செய்த ஈகியர்களின் மணிமண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிபடையில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 

அதுமட்டுமின்றி, அதில் பங்கேற்ற ஈகியர்களின் குடும்பத்தினர் இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கை மனுவைக் கூட முதலமைச்சரிடம் அளிக்க விடாமல் அதிகாரிகளால் தடுக்கப்பட்டிருக்கின்றனர். திமுக அரசின் இந்த சமூக அநீதி நடவடிக்கைக்கு பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 21 ஈகியர்களுக்கு  விழுப்புரம் வழுதரெட்டியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் திறப்பு விழா இன்று காலை நடத்தப்பட்ட நிலையில், அதில் பங்கேற்பதற்காக நேற்று மதியமே அழைத்துச் செல்லப்பட்ட  21 ஈகியர்களின் குடும்பத்தினர், கிட்டத்தட்ட பிணைக்கைதிகளைப் போல நடத்தப்பட்டுள்ளனர்.  

நேற்று பிற்பகலில் மணிமண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களுக்கு  மணிமண்டப திறப்பு விழாவின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து  மாவட்ட உதவி ஆட்சியர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் என்ற அதிகாரியால் பாடம் நடத்தப்பட்டிருக்கிறது.

அப்போது ஊடகங்களுடனோ, வேறு யாருடனோ பேசக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.  தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் தங்களின் நோக்கம் என்றும், அதற்கான கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் வழங்க வேண்டும் என்று தியாகிகளின் குடும்பத்தினர் கேட்ட போது, அது போன்று எந்த மனுவையும் முதலமைச்சரிடம் தரக்கூடாது என்று அவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். 

அதையும் மீறி, இன்று காலை  முதலமைச்சரிடம் வழங்குவதற்காக  ஈகியர் குடும்பத்தினர்  மனுக்களை எடுத்துச் சென்ற போது, அவை அனைத்தையும் விழா நடைபெறும் இடத்தில் இருந்த மாவட்ட உதவி ஆட்சியர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் தலைமையிலான  குழுவினர் பறித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஈகியர்களின் மணிமண்டபத்தை  திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம்  ஈகியர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து முறையிட்ட போது, அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் முதலமைச்சர் சென்று விட்டதாகவும் ஈகியர் குடும்பத்தினர்  குற்றஞ்சாட்டி உள்ளனர். வன்னியர் இட ஒதுக்கீட்டு கோரிக்கை குறித்த மனுக்களைக் கூட பெற முடியாத அளவுக்கும்,  அவர்களின் கோரிக்கைகளை  முதலமைச்சர் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கும் திமுக அரசு பாசிசத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது.

தியாகிகள் மணிமண்டபத் திறப்பு விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்ளப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே,  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தவாறு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை  அந்த விழாவில் வெளியிட வேண்டும் என்று  பா.ம.க.  நிறுவனர்  மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். 

ஆனால், அந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடவில்லை என்பது மட்டுமின்றி,  அது குறித்த மனுக்களைக் கூட முதலமைச்சரிடம் வழங்க விடாமல் தடுக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்த அரசு வன்னியர்கள் மீது எத்தகைய வன்மத்தைக் கொண்டிருக்கிறது என்பது அம்பலமாகியிருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்ற வன்னியர்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் எவ்வளவு தான் முட்டுக்கட்டைகளைப் போட்டாலும், அவை அனைத்தையும் முறியடித்து வன்னியர்களுக்கான சமூகநீதியை  மருத்துவர் அய்யா அவர்கள்  வென்றெடுத்துக் கொடுப்பார்.  அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்" என்று மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Anbumani Ramadoss Vanniyar Reservation DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->