பழனி தைப்பூசத் திருவிழா கோலாகல தொடக்கம்..11-ம் தேதி தேரோட்டம்! - Seithipunal
Seithipunal


பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும்தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வருகிற 11-ம் தேதி நடைபெறுகிறது.

தைப்பூசத்திருவிழாவின் சிறப்பு அம்சமே பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்து முருகபெருமானை தரிசனம் செய்து செல்வதுதான். அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழனி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வேல், மயில், சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிறக்கொடி ஆகியவை கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தன. அதன்பின்பு மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் தைப்பூச திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா" என கோஷம் எழுப்பினர்.

கொடியேற்றத்தை முன்னிட்டு வள்ளிதெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.மேலும் 10 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் தினமும் சுவாமி ரத வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டு கிடா, காமதேனு, தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

அதனை தொடர்ந்து 6-ம் நாளான வருகிற 10ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் மணக்கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

மேலும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வருகிற 11ந் தேதி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து அன்று காலை 5 மணிக்கு மேல் சண்முகர் நதிக்கு எழுந்தருளலும், காலை 11.15 மணிக்கு மேல் தேரேற்றமும், மாலை 4.45 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெறும்.இதையடுத்து  ரத வீதிகளில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

மேலும் 14ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடைபெறும். அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தற்போதே பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Palani Thaipoosam festival begins On the 11th!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->