ஸ்தம்பிக்க போகும் தருமபுரி! போராட்டத்தை அறிவித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் வறண்ட மாவட்டமாகவும், வேலை வாய்ப்பற்ற பின்தங்கிய மாவட்டமாகவும் திகழும் தருமபுரி மாவட்டத்தை வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்ற தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதை செயல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தருமபுரி மாவட்ட மக்கள்நலன் காக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை.

தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 4.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. ஆனால், அதில் 1.96 லட்சம் ஹெக்டேர், அதாவது 43.52 சதவீதம் நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெற்றவை. மீதமுள்ள 56.48 சதவீதம் நிலங்களில் மழையை நம்பி தான் விவசாயம் நடைபெறுகிறது.

அதனால், தருமபுரி மாவட்ட வேளாண் குடும்பங்கள் நிலம் இருந்தும் பாசன ஆதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதனால், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டு, 3 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் வேலை தேடிச் சென்றுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கும் கீழ் சென்று விட்டதால், வேளாண்மைக்கு புத்துயிரூட்டுவது சாத்தியமற்றதாகி வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணை, கேசரகுழிபள்ளம் அணை, சின்னாறு அணை, தும்பல அள்ளி அணை, தொப்பையாறு அணை, நாகாவதி அணை, பஞ்சப்பள்ளி அணை, வரட்டாறு அணை, வள்ளிமதுரை அணை, வாணியாறு அணை ஆகிய 10 அணைகளும் வறண்டு கிடக்கும் நிலையில், அந்த அணைகளில் மட்டுமின்றி, 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட மொத்தம் 1230 நீர்நிலைகளிலும் நிரப்பி ஆண்டு முழுவதும் உழவு செய்வதை உறுதிப்படுத்துவதற்கான உன்னத திட்டம் தான் தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டம் ஆகும்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை செல்லும் பாதையிலேயே இந்தத் திட்டத்திற்காக குழாய்களை அமைத்து தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு இடையே நீர் செல்லும் பாதை மன்னர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்டிருப்பதால் சில ஏரிகளில் நிரப்புவதன் மூலம் அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்ல முடியும்.

ஒட்டுமொத்த மாவட்டமும் பயன் பெறும் தருமபுரி-காவிரி உபரி நீர்த் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.650 கோடியை செலவழிக்க அரசு மறுக்கிறது.

தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டமாகவே தொடர்வதை அனுமதிக்க முடியாது. தருமபுரி மாவட்டத்தின் உழவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோளையும் ஏற்று, தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அக்டோபர் 4-ந் தேதி வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த பா.ம.க. அழைப்பு விடுத்திருக்கிறது.

தருமபுரி மாவட்டத்தின் வளமான எதிர்காலத்திற்காக நடத்தப்படும் இந்த அறவழிப் போராட்டத்திற்கு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழு ஆதரவு கொடுத்து, தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்" அன்புமணி இராமதாஸ் வலியறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss Announce Dharmapuri Protest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->