கள்ளக்குறிச்சி விவகாரம் : இரண்டு எம்எல்ஏ க்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!
PMK Leader Anbumani Ramadoss Emphasizing to Arrest 2 MLAs On Kallakurichi Tragedy
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 120 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 30 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கள்ளக்குறிச்சி விவகாரத்தை தமிழக அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமாகத் தான் கருத வேண்டும்.
கள்ளக்குறிச்சி பகுதியில் பல காலமாக கள்ளச் சாராயம் விற்பனை நடந்து வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான். அப்படி இருந்தும் இது குறித்து ஏன் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? இத்தனை பெரிய சம்பவம் நடந்த பிறகு இப்போது சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. இது வெறும் கண்துடைப்பு நாடகம் தான்.
இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் பொறுப்பேற்று, அமைச்சர்கள் எ. வ. வேலு மற்றும் எஸ். முத்துசாமியை பதவியை விட்டு நீக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் சட்ட விரோதமான மதுபான விற்பனையில் திமுக எம்எல்ஏ உதயசூரியன் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் இவருடன் இந்த பகுதியின் இன்னொரு எம்எல்ஏ வும் சேர்ந்து தான் கள்ளச் சாராய வியாபாரிகளை பாதுகாத்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். தற்போது 50 ஆக உள்ள பலி எண்ணிக்கை 60 ஆக உயரும் என்று ஒரு மருத்துவராக அஞ்சுகிறேன்" என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
English Summary
PMK Leader Anbumani Ramadoss Emphasizing to Arrest 2 MLAs On Kallakurichi Tragedy