பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
அரசியல் தீர்மானம் : பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை ஒரு மனதாக சிறப்புப் பொதுக்குழு தேர்வு செய்கிறது!
தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வது மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி. அனைத்துத் தரப்பு மக்களின் கட்சியாக திகழும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசியலில் பதித்த முத்திரைகள், படைத்த சாதனைகள் ஏராளம்.
தமிழ்நாட்டு அரசுக்கு புதிய திட்டங்களை வகுப்பதில் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்கும் கட்சியாகவும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் போது, அதை எதிர்த்து முறியடிக்கும் கட்சியாகவும், மக்களுக்கான சிறந்த திட்டங்களை செயல்படுத்தும் போது அதை பாராட்டும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சி விளங்குகிறது. தமிழ்நாட்டு அரசியல் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரும் பங்குண்டு.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 01.01.1998 முதல் பணியாற்றி வரும் ஜி.கே. மணி அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை சந்தித்த 9 மக்களவைத் தேர்தல்களில் 6 தேர்தல்களையும், 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 தேர்தல்களையும் ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் தான் எதிர்கொண்டிருக்கிறது. மிகவும் நெருக்கடியான கால கட்டங்களிலும் கூட பாட்டாளி மக்கள் கட்சி எனும் பெருங்கப்பலை தடுமாறாமல் சிறப்பாக நடத்திச் சென்ற மாலுமி ஜி.கே.மணி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை 25 ஆண்டுகள் அலங்கரித்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்து செல்லும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஜி.கே. மணி அவர்கள் கட்சியின் நிறுவனரிடமும், நிர்வாகிகளிடமும் தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக யாரை அமர்த்தலாம் என்று தலைமை நிலைய நிர்வாகிகள் மட்டத்தில் கலந்தாய்வு மேற்கொண்ட போது, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக, தற்போதைய இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் மேனாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த விருப்பமாகவும், வேண்டுகோளாகவும் இருந்தது.
இந்திய வரலாற்றில் இளம் வயதில் மத்திய கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றவர், உலகத்தின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தை இந்தியாவில் செயல்படுத்தியவர், உயிர் காக்கும் 108 அவசர ஊர்தி சேவையை அறிமுகம் செய்தவர், புகையிலை ஒழிப்பு மற்றும் போலியோ நோய் ஒழிப்புக்காக 4 சர்வதேச விருதுகளையும், இரு தேசிய விருதுகளையும் வென்றவர், மிகவும் இளைய வயதில் உலக சுகாதார அவையை தலைமையேற்று நடத்தியவர், 50 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஐந்தாண்டுகளில் செய்தவர் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களாலும், மருத்துவத் துறையின் நடமாடும் என்சைக்ளோபீடியா என்று அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அவர்களாலும் பாராட்டப்பட்டவர், ஐ.நா. தலைமை செயலாளராக இருந்த பான்-கி-மூன் அவர்களே மரபுவரிசையை (Protocol) மீறி, அலுவலகத்திற்கு தேடி வந்து பாராட்டிய பெருமைக்குரியவர், மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு காலம் காலமாக மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதி காத்தவர் என ஏராளமான பெருமைகளுக்கும், சாதனைகளுக்கும் சொந்தக்காரரான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அவர் கட்சியை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்வார் என்று இந்தப் பொதுக்குழு நம்புகிறது.
தமிழ்நாட்டில் வலிமையான அரசியல் கட்சியாகவும், தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தொண்டர்களின் ஆவலாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கும் நிலையில், அந்தப் பணிக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தான் பொருத்தமானவராக இருப்பார் என பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கருதுகிறது.
அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியை கடந்த 25 ஆண்டுகளாக வழிநடத்திச் சென்ற ஜி.கே.மணி அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த சிறப்பு பொதுக்குழு, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை ஒருமனதாக தேர்வு செய்கிறது.
தீர்மானம் 1 : தமிழ்நாட்டில் கல்வி - வேலைவாய்ப்புக்கான வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை, சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.50 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை முன் வைத்திருந்த 7 காரணங்களில் 6 தவறானவை; அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதுமட்டுமின்றி, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்றும், உரிய புள்ளிவிவரங்களை முன்வைத்து இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பது சமூக நீதியை வலுப்படுத்தும் செயல் ஆகும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி சென்னையில் கூடிய பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் வழிகாட்டுதலின்படி, போதுமான புள்ளிவிவரங்களைத் திரட்டி, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவசர செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையிலான எழுவர் குழு, கடந்த 08.04.2022 அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மருத்துவர் அய்யா சார்பில் கேட்டுக் கொண்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும், அதற்கான அதிகாரம் தமிழக சட்டப்பேரவைக்கு உண்டு என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது என்றும் கூறினார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் முதலமைச்சர் காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது. முதலமைச்சர் அளித்த வாக்குறுதியின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு நம்புகிறது.
ஆனாலும், 2022-23 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நெருங்கி வருவதால், வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ஜூன் -ஜூலை மாதங்களிலும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு செப்டம்பர் மாதத்திலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது. அதற்கு முன்பாக வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப் பட்டால் தான், உழைக்கும் பாட்டாளி மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியை போக்க முடியும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க நியாயமான காரணங்கள் ஏராளமாக உள்ளன. வன்னியர்களால் கல்வி பெற முடியவில்லை; கடுமையாக உழைத்து ஈட்டும் வருவாயில் கூட பெரும் பகுதியை மதுவுக்காக செலவிடுவதால் அவர்களால் முன்னேற முடியவில்லை என்பதை தமிழக அரசின் புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. இத்தகைய நிலையில் உள்ள வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் தான் அவர்களை முன்னேற்ற முடியும். இந்த உண்மையை தமிழக அரசும் ஒப்புக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் தமிழக அரசிடம் உள்ளன. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் அந்த புள்ளி விவரங்களை தொகுத்து, ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கான பரிந்துரை அறிக்கையை பெற வேண்டியது வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்குவதற்கான அடிப்படை பணியாகும். இந்தப் பணியை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக இந்தப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; 2022-23 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையிலேயே இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று என்று தமிழ்நாட்டு அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 2: தமிழ்நாட்டிற்கான நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்த இரு மாதங்களில் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்டம், 86 நாட்களுக்குப் பிறகு மே மாதம் 5-ஆம் தேதி ஆளுனர் மாளிகை வழியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின் இன்று வரை 24 நாட்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நீட் விலக்கு சட்டம் முதன்முறையாக பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 142 நாட்கள் கழித்து, பிப்ரவரி ஒன்றாம் தேதி அந்த சட்டம் தமிழக ஆளுனரால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் நிறைவேற்றி அனுப்பப் பட்டது. நீட் விலக்கு சட்டம் ஆளுனர் மாளிகையிலிருந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கே மொத்தம் 234 நாட்கள் ஆகி விட்டன. அதன்பின் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலும் 24 நாட்கள் ஆகி விட்டன. இந்த தாமதம் தமிழக மாணவர்கள் நலனில் பெரும் -பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கக்கூடும். அதற்கு இன்னும் இரண்டரை மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றால் மட்டும் தான் நடப்பாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்த முடியும். இதை உணர்ந்து அடுத்த இரு மாதங்களுக்குள் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும்; இதற்காக பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3: உயிர்க்கொல்லியாக மாறி வரும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும்!
மது, புகை, கந்துவட்டி ஆகிய அனைத்தையும் விட மிக மோசமான உயிர்க்கொல்லியாக ஆன்லைன் சூதாட்டங்கள் உருவெடுத்துள்ளன. குறைந்த காலத்தில் பெரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டதால் அதிலிருந்து மீண்டு வர முடியாத மயக்கம் ஆகியவற்றின் காரணமாக ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடுபவர்கள் அதில் லட்சக் கணக்கில் பணத்தை இழக்கிறார்கள். முதலில் சேமிப்பை இழப்பவர்கள், பின்னர் கடன் வாங்கி பணத்தை இழக்கின்றனர். ஒரு கட்டத்தில் தாங்க முடியாத அளவுக்கு கடன் சுமை அதிகரிக்கும் போது, அவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். முந்தைய ஆட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தப் பிறகு மட்டும், தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் 21 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டங்களால் கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களும் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதன் மூலமாக மட்டுமே இந்த தீமைகளுக்கு முடிவு கட்ட முடியும். ஆன்லைன் சூதாட்டம் திறமை சார்ந்த விளையாட்டு அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றினால் மட்டும் தான் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய முடியும். ஆனால், முந்தைய ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாக தமிழக அரசு கூறி வருகிறது. உச்சநீதிமன்ற மேல் முறையீட்டால் எந்த பயனும் கிடைக்காது என்பதால், உடனடியாக திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றும்படி பா.ம.க. வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4: மதுவால் பெருகி வரும் குற்றங்கள்: உடனடியாக மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டின் சீரழிவுக்கு வழி வகுக்கும் சமூகக் கேடுகளில் முதன்மையாவது மது வணிகம் தான். மதுவால் தான் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன; வாழ வேண்டிய இளம்பெண்கள் விதவைகளாக மாறி வருகின்றனர். மதுவின் தீமைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் நிலையில், அதை காது கொடுத்துக் கேட்கவும், மதுவிலக்கை நடைமுறைபடுத்தவும் தமிழக ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்.
கட்டுப்பாடில்லாமல் திறக்கப்பட்ட மதுக்கடைகளாலும், தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும் மதுவாலும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. ஓடும் பேருந்தில் மாணவர்களும், மாணவிகளும் மது குடிப்பது, குடி போதையில் பெற்ற மகள்களை தந்தையே அடித்துக் கொலை செய்வது என்பன போன்ற குற்றங்களும், சமுதாயச் சீரழிவுகளும் பெருகி வருகின்றன. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருதல்; பொது அமைதி சீரழிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க தமிழகத்தில் ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவே முழு மதுவிலக்கை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5: தமிழ்நாடு அரசுப் பணிகள் முழுவதையும், தனியார் வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காடும் தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய சட்டம் இயற்றவேண்டும்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளிலும், ஆசிரியர் பணிகளிலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர முடியும் என்பதை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று தமிழகத்தை ஆளும் கட்சி வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், அத்தகைய சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பதிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்து தேர்வு வாரியங்கள் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தாளில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது வரவேற்கத் தக்கது தான் என்றாலும் கூட, போதுமான நடவடிக்கை அல்ல.
தமிழ்நாடு அரசு வேலைகளுக்கு தமிழ் பாடத்தில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டாலும் கூட, முறைகேடுகள் மூலம் பிற மாநிலத்தவர் தமிழ்ப் பாடத்தில் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேரும் வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க ஒரே வழி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர முடியும் என்று சட்டம் இயற்றுவதுதான். இந்தியாவின் பல மாநிலங்களில் 100% மாநில அரசுப் பணிகளும் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டிலும் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
அதேபோல், இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் தனியார்துறை வேலைவாய்ப்புகளில் 70% முதல் 80% உள்ளூர்வாசிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையில், தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு தமிழ்நாட்டவருக்கே வழங்கப்பட வேண்டும். இதற்கான சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இக்கூட்டம் கோருகிறது.
தீர்மானம் 6: சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மானியம் வழங்க வேண்டும்!
சமையல் எரிவாயுவின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு சிலிண்டர் ரூ.1018.50 என்ற உச்சத்தை அடைந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது மேலும் உயர வாய்ப்புள்ளது. சமையல் எரிவாயு விலை உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில், விலை உயர்விலிருந்து மக்களைக் காப்பதற்கான மானியம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இது பொதுமக்கள் மீதான இரட்டைத் தாக்குதல் ஆகும்.
2020-ஆம் ஆண்டு மே மாதம் வரை சமையல் எரிவாயுவுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக ஒரு சிலிண்டருக்கு ரூ.435 மானியம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை குறைந்ததால் மானியமும் படிப்படியாக குறைக்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டு மே மாதம் சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டர் ரூ.610 ஆக குறைந்ததாலும், அதற்கு முன்பு வரை மானியத்துடன் சேர்த்து இதே விலையில் தான் எரிவாயு விற்பனை செய்யப்பட்டது என்பதாலும் மானியம் நிறுத்தப்பட்டது. அதன்பின் சில மாதங்கள் சமையல் எரிவாயு விலை உயராத நிலையில், பின்னர் 10 முறை விலை உயர்த்தப்பட்டு இப்போது ரூ.1018.50 என்ற உச்சத்தை அடைந்துள்ளது.
இந்த விலை உயர்வை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, 2020-ஆம் ஆண்டு மே மாத விலையான 610 ரூபாயை அடிப்படை விலையாக அறிவித்து, அந்த விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்க வேண்டும்; மீதமுள்ள தொகையை மத்திய அரசு மானியமாக வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோருகிறது.
தீர்மானம் 7: சென்னையில் மக்களின் வாழ்வுரிமையைக் காக்க தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த பா.ம.க நிர்வாகி கண்ணையனுக்கு வீர வணக்கம்.
வாழ வழியில்லாத மக்களை குடியிருக்கும் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்!
சென்னை இராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் தமிழக அரசால் ஒதுகப்பட்ட இடத்தில் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மக்களை, நீதிமன்ற ஆணை என்ற பெயரில், வீடுகளை இடித்து வெளியேற்ற தமிழக அரசு மேற்கொண்ட அத்துமீறலைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சென்னை மாவட்ட நிர்வாகி கண்ணையன் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு அருகிலேயே இடம் ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
கண்ணையன் போன்ற கடமை உணர்வுள்ள தொண்டர்களை இழக்க பா.ம.க. ஒருபோதும் விரும்புவது இல்லை. அநீதியை எதிர்த்து களத்தில் இறங்கி போராடுவதற்கு பதிலாக விலை மதிப்பில்லாத உயிரை தியாகம் செய்வதிலும் பா.ம.க.வுக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும், பிற மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்த ஈடு இணையற்ற தியாகத்தை பாமக வணங்குகிறது.
கண்ணையன் போன்றவர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்யும் சூழலை ஏற்படுத்துவது அரசின் மனித நேயமற்ற கொள்கைகள் தான். சென்னை, தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில், பயன்பாட்டில் இல்லாத, பதிவேடுகளில் மட்டுமே இருக்கக்கூடிய, நீர் நிலை மற்றும் வனத்துறை நிலங்களில் 50, 60 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் மக்களையும், குடியிருக்கும் மக்களையும் அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபடுவது வாழ்வுரிமையை பறிக்கும் செயலாகும். இத்தகைய அநீதியான செயல்களை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.
தமிழ்நாடு முழுவதும் பயன்பாடற்ற நீர்நிலைகள், வனத்துறை நிலங்களில் பல பத்தாண்டுகளாக வாழ்ந்து வரும் ஏழை, நடுத்தர மற்றும் வேளாண் குடிமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 8: புதுவையில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த வசதியாக, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்!
தமிழ்நாட்டின் அண்டைப் பகுதியான புதுவை யூனியன் பிரதேச அரசு நிர்வாகத்தில் எப்போதும் நிச்சயமற்ற நிலை நிலவி வருகிறது. நிதிநிலை அறிக்கையைக் கூட முழுமையாக தாக்கல் செய்ய முடியாத நிலைமை தான் நிலவி வருகிறது. புதுவையில் எந்தவொரு திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தாலும் அதற்கு மாநில ஆளுனரின் வழியாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது.
அதனால், மக்கள் நலத் திட்டங்களை நினைத்த மாத்திரத்தில் செயல்படுத்த முடியாத நிலை நிலவுகிறது. புதுவையின் வளர்ச்சியை இது பாதிக்கிறது. இந்த நிலையை மாற்றி புதுவையை நீடித்த வளர்ச்சிப் பாதையில் பயணிக்கச் செய்வதற்காக புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.