தமிழக அரசின் தோல்விக்கு கிடைத்த சவுக்கடி! பாமக-விற்கு கிடைத்த வெற்றி! டாக்டர் இராமதாஸ் பரபரப்பு அறிக்கை!
PMK Ramadoss Condemn to DMK GOvt MKStalin Kallakurichi case CBI HC
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்து சிபிஐ விசாரணை தமிழக அரசு நிர்வாகத்தின் தோல்விக்கு கிடைத்த சவுக்கடி என்றும், தமிழ் நாட்டிற்கு பெரும் கேடாக உருவெடுத்துள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் நச்சு சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கள்ளச்சாராய சாவுகளின் பின்னணியை வெளிக்கொண்டு வரும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இதுவாகும்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி பிறப்பித்த ஆணையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகவும் முக்கியமானவை. கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் கவனத்திற்கு வராமல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது; கள்ளச்சாராய விற்பனையை தமிழக காவல்துறை கண்டும் காணாமலும் இருந்ததைத் தான் இது காட்டுகிறது; கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு திரும்பப் பெற்றது தவறு என்றெல்லாம் கண்டனக் கணைகளை நீதிபதிகள் தொடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் தொடர்பாக நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் அனைத்தும், அந்த துக்க நிகழ்வு நடைபெற்ற போது என்னால் தெரிவிக்கப்பட்டவை தான். இதன் மூலம் இந்த விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட நிலைப்பாடு மிகவும் சரியானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திற்கு அருகிலும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திற்கு அருகிலும் கடந்த ஆண்டு நச்சு சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தமிழக அரசு உண்மையாகவே மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தால் அதன் பின்னர் தமிழ் நாட்டின் எந்த பகுதியிலும் கள்ளச்சாராயம் விற்காமல் இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இது தமிழக அரசின் படுதோல்வி ஆகும்.
அதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் திமுகவின் நிர்வாகிகளும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் தான் முழுக்க முழுக்க ஆதரவாக இருந்திருக்கின்றனர் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு ஆகும்.
இப்போது நீதிபதிகள் எழுப்பியுள்ள வினாக்கள் பா.ம.க.வின் குற்றச்சாட்டுகள் சரியானவை என்பதை உறுதி செய்திருக்கின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றையத் தீர்ப்பு கள்ளச்சாராய சாவுகளைத் தடுப்பதில் தமிழக அரசின் தோல்விக்கு கிடைத்த சவுக்கடி ஆகும். தமிழக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி இருந்தால் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்; இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக் கூடாது. இவை அனைத்திற்கும் மேலாக தமிழ் நாட்டிற்கு பெரும் கேடாக உருவெடுத்துள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Ramadoss Condemn to DMK GOvt MKStalin Kallakurichi case CBI HC