கடுமையாக கண்டித்த உயர்நீதிமன்றம்! இதான் திராவிட மாடலா? புள்ளி விவரங்களுடன் கிழித்தெடுத்த டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு 7 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்களை வழங்காமல் இழுத்தடிப்பது தான் திராவிட மாடலா? என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள பல உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு  7 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை என்பதும், இதுதொடர்பான உள்ளாட்சி அமைப்புகளின் அணுகுமுறையை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. 

தங்களின் வாழ்நாளில் பெரும் பகுதியை அரசுக்காகவும், உள்ளாட்சி அமைப்புகளுக்காகவும்  உழைத்துக் களைத்த  பணியாளர்களுக்கு ஓய்வுக்கால பயன்களை வழங்குவதில் அரசு நிர்வாகம் காட்டும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை.

சேலம் மாநகராட்சியில் உதவிப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சிபி சக்கரவர்த்தி என்பவர் அவரது ஓய்வுக்கால பயனான  ரூ.51.70 லட்சத்தை  உடனடியாக வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன்  கூறியிருக்கும் கருத்துகள் தான் நிலைமையில்  தீவிரத்தை உணர்த்தியிருக்கின்றன. 

சேலம் மாநகராட்சியில் மட்டும் 2017-ஆம் ஆண்டு முதல் ஓய்வுபெற்ற 194 பணியாளர்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை என்றும்,  அவற்றை வழங்குவதற்கு மட்டும் ரூ.200 கோடி அளவுக்கு தேவைப்படும்  என்றும் சேலம் மாநகராட்சி கூறியுள்ளது.  மேட்டூர் நகராட்சியிலும் ஓய்வுபெற்ற பலருக்கு பல ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என பெரும்பான்மையான உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு ஓய்வுக்கால பயன்கள் பாக்கி வைக்கப்பட்டுள்ளன. 

ஏற்கனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி  ஓய்வுபெற்றவர்களில் எட்டாயிரத்திற்கும் கூடுதலான ஓய்வூதியர்களுக்கு ரூ.2600 கோடிக்கும் கூடுதலான தொகை  வழங்கப்பட வேண்டியுள்ளது.  பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிலும் ஓய்வுபெற்றவர்களுக்கு பல ஆண்டுகளாக  ஓய்வுக்கால பலன்கள் வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எந்த அமைப்பிலும் ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வுக்கால பயன்களை வழங்கும் அளவுக்கு நிதி இல்லை. அனைத்து அமைப்புகளுமே இதற்காக தமிழக அரசிடம் தான் நிதி கோரி  காத்திருக்கின்றன. 

தமிழக அரசிடமும் நிதி இல்லாத சூழலில் இன்று ஓய்வு பெறுபவருக்கு ஓய்வுக்கால பயன்கள் கிடைக்க அவர் பணியாற்றிய அமைப்பைப் பொருத்து 10 ஆண்டுகள் வரை ஆகக்கூடும். 60 வயதில் ஓய்வுபெறும் ஒருவருக்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகள் ஏராளமாக இருக்கும். அதை நிறைவேற்றும் வகையில் உடனடியாக ஓய்வுக்கால பயன்களை வழங்காமல் 10 ஆண்டுகள் தாமதித்து வழங்குவதால் என்ன பயன்?

தமிழ்நாட்டில் பொதுத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் எத்தனை பேருக்கு, எவ்வளவு கோடி அளவுக்கு  ஓய்வுக்கால பயன்கள் வழங்கவேண்டியுள்ளது, அவை எப்போது வழங்கப்படும்? என்பன குறித்த விவரங்களை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். 

அதற்குத்  தேவையான நிதியை தமிழக அரசு எவ்வாறு திரட்டப் போகிறது?  ஓய்வுபெற்றவர்களுக்கு எப்போது ஓய்வுக்கால பயன்களை வழங்கப்போகிறது?  என்பது குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

அரசுத்துறை, பொதுத்துறை  உள்ளிட்ட அமைப்புகளில் பணியாற்றி ஓய்வு பெறுபவருக்கு அவர் ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வுக்கால பயன்களை வழங்குவது தான் அவர்களின் உழைப்புக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் ஆகும். 

எனவே, அரசுத்துறைகள், பொதுத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வுபெறும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அவர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வுக்கால பயன்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Ramadoss Condemn top DMK Govt MK Stalin HighCourt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->