போராடிய கௌரவ விரிவுரையாளர்கள் பணிநீக்கம் - தமிழக அரசு தரப்பில் உத்தரவு!
protest honorary lecturers Dismissal
தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் 4083 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலை.களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் 1500 கவுரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
ரூ.10,000 ஊதியத்தில் பத்தாண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த அவர்களுக்கு படிப்படியாக ஊதியம் உயர்த்தப்பட்டு, நடப்பாண்டு முதல் தான் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
இதில், பெரும்பான்மையினர் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருபவர்கள். தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனாலும், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வருவதில்லை என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பலமுறை அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், கவுரவ விரிவுரையாளர்கள், தங்களின் கோரிக்கைகளுக்காக சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கௌரவ விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று, கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், அவர்களுக்கு மாற்றாக உரிய தகுதியுடன் இருக்கும் கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக திமுக அரசு பதவியேற்ற பிறகு கவுரவ விரிவுரையாளர்கள் பணி வரன்முறை செய்யப்படுவர் என்று, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
protest honorary lecturers Dismissal