ஈபிஎஸ்-க்கு எதிரான டெண்டர் முறையீடு வழக்கு! DVAC-யை ரவுண்டு கட்டிய உச்ச நீதிமன்றம்!
SC questioned DVAC tender corruption case against EPS
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறையில் டெண்டர் கோரியதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறி அளித்த புகாரின் மீது சிபிஐ விசாரணை குழு அமைக்குமாறு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் சிபிஐ விசாரணைக்கு அவசியம் இல்லை எனக் கூறி தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 18ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு ஊழல் கண்காணிப்பு துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம்.திரிவேதி ஆகியோர் அமர்வின் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது ஒரு வாரம் ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டனர். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தொடங்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் மட்டுமே வழக்குகளை எதிர்கொள்கின்றனர். ஆளுங்கட்சியினர் யாரும் வழக்குகளை எதிர்கொள்வதில்லை. ஊழல் வழக்கு என்ற பெயரில் அரசியல் திணிக்க வேண்டாம் என காட்டமான கருத்தை தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
SC questioned DVAC tender corruption case against EPS