ஒவைசி மீது தாக்குதல் சீமான் கண்டனம்.!
Seaman condemns attack on Owaisi
அசாதுதின் ஒவைசி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்க்ணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பும் வழியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி அவர்களின் பிரச்சார வாகனம் மீது துப்பாகியால் சுட்டு கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துளார். மேலும், ஜனநாயகத்தில் மாற்றுச் சிந்தனையாளர்களை அச்சுறுத்தல் மூலம் அடிபணிய வைக்க முயலும் மதவாதிகளின் இக்கொடூரச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறித்து இந்தியாவின் பன்முகத் தன்மையையும் இறையாண்மையையும் முற்று முழுதாக சீர்குலைக்கும் இந்துத்துவ மோடி அரசின் ஒற்றையாட்சி கொடுங்கோன்மைக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வெடித்து சிதறும் அவரது உரத்த குரல் நாட்டின் ஜனநாயக மாண்புகளை மழுங்காமல் பாதுகாக்கும் கப்பரண்களில் ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசின் குரல்வளையை நெரிக்கும் வகையிலான போர்க்குணம் மிக்க சகோதரர் ஒவைசியின் இருப்பு, தங்களது காட்டாட்சிக்கு பெரும் இடையூறாக இருக்கின்ற காரணத்தினால், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ் வரிசையில் மதவாதிகளால் நடத்தப்பட்ட மீண்டும் ஒரு கோழைத்தனமான தாக்குதலாகவே இது இருக்கக்கூடும் என்ற ஐயமே மேலோங்குகிறது.
ஆகவே கொலைவெறி தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சகோதரர் அசாதுதீன் ஒவைசி அவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சூழ்ந்த உயர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கொலைவெறியுடன் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மட்டுமல்லாது அவர்களுக்கு பின்புலத்தில் உள்ளவர்களையும் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Seaman condemns attack on Owaisi