பருப்பில் கூட கலப்படம்! தமிழக அரசு நடத்துவது நியாயவிலைக்கடையா? அநியாயவிலைக்கடையா? கொந்தளிக்கும் சீமான்!
Seeman Condmen to DMK Govt Ration shop
தமிழ்நாடு அரசின் பொதுவழங்கல் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த துவரம் பருப்பில் பட்டாணி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், ஐம்பதாண்டு கால திராவிட ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் நடைபெறாத துறையே இல்லை என்ற அளவிற்கு அரசுத்துறைகள் அத்தனையிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது.
குறிப்பாக தமிழ்நாடு அரசின் உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் பொதுவிநியோக திட்டத்தில் மக்களுக்கு இலவச உணவுப்பொருள் வழங்குகிறோம் என்ற பெயரில் உண்ண முடியாத அளவிற்கு தரமற்ற கலப்பட அரிசியே பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. அதன் உச்சமாக திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் பல்லி விழுந்த புளி, உருகிய வெல்லம், உடைந்த கரும்பு என்று தரமற்ற பொருட்களை வழங்கி மிகப்பெரிய ஊழல் புரிந்தது.
அதன் நீட்சியாக தற்போது நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்படவிருந்த துவரம் பருப்பில் கலப்படம் செய்யப்பட்டிருந்தது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நடத்திய திடீர் ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது.
கலப்பட ஊழல் வெளிச்சத்திற்கு வந்தவுடன் உடனடியாக ஒப்பந்ததாரர்கள் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ள தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை இத்தனை நாட்களாக உறங்கிக்கொண்டிருந்தது ஏன்?
எத்தனை ஆண்டுகளாக இத்தகைய கலப்படம் நடைபெற்று வருகிறது? இதில் தொடர்புடையவர்கள் யார், யார்? பொதுவிநியோகப் பொருட்கள் ஒவ்வொரு மாதமும் சரியாக, தரமாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு தவறியது ஏன்?
மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்யும் இதுநாள்வரை, உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? அரிசி, கோதுமை, பாமாயில், சர்க்கரை என்று நியாயவிலைக்கடையில் வழங்கப்படும் அத்தனை பொருட்களிலும் கலப்படம் எனும்போது துவரம்பருப்பில் மட்டும் கலப்படம் களைய நடவடிக்கை என்பது அரசின் ஏமாற்று அறிவிப்பாகும்.
தமிழ்நாடு அரசு விற்கும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம்; பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டையில் கூமுட்டைகள் கலப்படம்; பொங்கல் விழா பரிசுத் தொகுப்பில் கலப்படம்; நியாயவிலைக்கடையில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரையில் கலப்படம்; சுகாதாரத்துறையில் வழங்கப்படும் மருந்துகளில் கலப்படம்; வேளாண்துறையில் விவசாயிகளுக்கு விற்கப்படும் உரத்தில் கலப்படம்; மாநகராட்சி வழங்கும் குடிநீரில் சாக்கடை நீர் கலப்படம்; மாநில கல்விக்கொள்கையில் ஒன்றிய கல்விக்கொள்கை கலப்படம் என்று திராவிட மாடல் திமுக ஆட்சியின் கலப்பட பட்டியல் நீண்டுகொண்டே போகும்!
திராவிடமே கலப்படம் எனும்போது திராவிட ஆட்சியில் அனைத்துதுறையிலும் கலப்படம் இருப்பதில் வியக்க ஒன்றுமில்லைதான். ஆனால், நியாய விலைக்கடைகள் மூலம் மக்களுக்கு மலிவுவிலையில் உணவுப்பொருள் வழங்குவதாக மார்தட்டும் திமுக அரசு, கலப்படப் பொருட்களை வழங்கி மக்களின் உயிரோடும், உடல் நலனோடும் விளையாடுகின்ற முறைகேடுகளை உடனடியாக களைய வேண்டும்.
ஆகவே, உணவுப்பொருள் வழங்கல் துறையில் நடைபெறும் ஊழலைத் தடுத்துநிறுத்தி, மக்களுக்குத் தரமான பொருட்கள் வழங்கி பெயருக்கேற்ப நியாய விலைக்கடைகள் நியாயமாக செயல்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman Condmen to DMK Govt Ration shop