'நல்லாட்சியின் நாயகன்' வெட்கக்கேடானது! எப்போது, எங்கே நிறைவேற்றினீர்கள் முதல்வரே? - சீமான் அடுக்கடுக்கான கேள்விகள் - Seithipunal
Seithipunal


காற்றில் பறக்கவிட்டத் தேர்தல் வாக்குறுதிகள் பல இருக்கையில் அவற்றை நிறைவேற்றிவிட்டதாகப் பெருமைப்பட்டுக்கொள்வதா? உளச்சான்று உறுத்தவில்லையா முதல்வரே? என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சனநாயகத்தால் நிறுவப்படும் ஓர் அரசை நாட்டின் குடிகள்தான், மதிப்பிட வேண்டும். ஆட்சி முறைமைகளில் நன்மைகள் நிகழ்ந்தால் அவர்களாகத்தான் போற்றிக் கொண்டாட வேண்டும். ஆனால் இங்கோ, ‘நூறாண்டு போற்றும் ஓராண்டு சாதனை’ என ஆட்சியாளர்களே அரசுப் பணத்தில் விளம்பரம் செய்துச் சுயதம்பட்டம் அடிக்கும் கேலிக்கூத்துகளும், 'நல்லாட்சியின் நாயகன்' எனத் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொள்ளும் நாடகங்களும் நாள்தோறும் அரங்கேறுகின்றன.

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றிடாத ஆட்சியாளர் பெருந்தகைகள், நாட்டையே மாற்றிப் படைத்து, நல்லாட்சி தந்து கொண்டிருப்பதாகக் கூறுவது வெட்கக்கேடானது!

தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டதாக தற்பெருமையோடு கூறுகிறார் மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள்! எப்போது, எங்கே நிறைவேற்றினீர்கள் முதல்வரே? அவற்றை எல்லாம் மக்கள் அறிவார்களா?

நீட் தேர்வுக்கான விலக்கு மாநில அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என அறிந்திருந்தும், புதிய சூத்திரம் வைத்திருக்கிறோம்; ரகசியத்திட்டம் வைத்திருக்கிறோம்; அவற்றால், நீட் தேர்வுக்கான விலக்கைப் பெறுவோம் என மேடைதோறும் முழங்கினீர்கள். உங்கள் ஆட்சியில் இதோ இரண்டாவது நீட் தேர்வும் வந்துவிட்டது. என்ன ஆயிற்று அந்த சூத்திரம், இரகசியமெல்லாம்? அவையும் மறந்துபோனதா? முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானம் இயற்றி, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் எனத் தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, தீர்மானம் இயற்றவே மூன்று மாதங்கள் காலங்கடத்தினீர்கள். நீட் தேர்வு அச்சத்தால் அடுத்தடுத்து மாணவப்பிஞ்சுகள் கருகி வரும்போதும் கள்ளமௌனம் சாதிப்பதுதான் நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய இலட்சணமா?

ஏழு தமிழர் விடுதலையைச் சாத்தியப்படுத்துவோம் என்றீர்கள்! தம்பி பேரறிவாளன் தானாகச் சட்டப்போராட்டம் நடத்திப் பெற்ற விடுதலைத் தீர்ப்பு, ஆறுபேர் விடுதலைக்கான திறவுகோலாகக் கிடைத்தும், அதனைக்கொண்டு, ஆளுநருக்கு அழுத்தம் தந்து விடுதலையைச் சாத்தியப்படுத்தாமல் நிற்பதேன்? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய இலட்சணமா?

சமூக நீதியின் அடிப்படையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் தரப்படும் என்றீர்கள். இப்போது அதற்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், நிதிநிலை சரியான பிறகு கொடுப்போம் என்றும் சாக்கு போக்குச் சொல்கிறீர்கள். இதுதான் கொடுத்த வாக்கை நீங்கள் நிறைவேற்றிய இலட்சணமா?

பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், பெட்ரோலுக்கு 3 ரூபாய் மட்டும் விலையைக் குறைத்துவிட்டு, அத்தியாவசியப் பொருட்களைச் சுமந்து செல்லும் கனரக வாகனங்களுக்கான டீசல் விலையில் அதுகூடக் குறைக்காமல் விட்டீர்கள். இதுதான் கொடுத்த வாக்கை நீங்கள் நிறைவேற்றிய இலட்சணமா?

எரிவாயு உருளைக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அறிவித்தீர்கள். இன்றோ அதுகுறித்தான பேச்சே எழவில்லை. இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய இலட்சணமா?

சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில், லாரிகள் மூலமாக நீர் வழங்குவதை தவிர்க்க, குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். அனைத்துக் கிராமங்களுக்கும் தூய்மையானக் குடிநீர் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள். எப்போது அவற்றை செயல்படுத்தப் போகிறீர்கள்? கண்ணுக்கெட்டிய தூரம்வரை அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை! இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய இலட்சணமா?

தமிழக ஆறுகள் அனைத்தும் மாசடையாமல் காக்க, ‘தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம்’ உருவாக்கப்படும் என்றீர்கள். கடந்த ஓராண்டு ஆட்சியில் ஆறுகளைக் காக்க நீங்கள் தீட்டிய திட்டங்கள் என்ன? குறைந்தது, மணல் கொள்ளையைத் தடுக்கவாவது முனைந்ததுண்டா? கண்முன்னே நடந்துவரும் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயற்சி எடுத்ததுண்டா? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய இலட்சணமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில், சொத்து வரி அதிகரிக்கப்படாது என உறுதியளித்தீர்கள். இப்போது 150 விழுக்காடுவரை சொத்து வரியை உயர்த்திவிட்டீர்கள்! இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய இலட்சணமா?

நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், உங்கள் கொளத்தூர் தொகுதியில் அரசின் அங்கீகாரம் பெற்று, பல பத்து ஆண்டுகளாக நிலைத்து வாழ்ந்து வந்த வசிப்பிட மக்களின் வீடுகளையே இடித்து, நடுத்தெருவுக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள்! இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய இலட்சணமா?

குடிசைகளே இல்லாதத் தமிழகம் உருவாக்க 'சிறப்பு வீட்டுவசதித் திட்டம்' கொண்டு வரப்படும் என்றீர்கள்! அத்திட்டம் எந்தளவில் இருக்கிறது? சென்னை மாநகரில் குடிசையிட்டு வாழ்ந்து வரும் அடித்தட்டு மக்களை, ஆக்கிரமிப்பாளர் எனக் கூறி, இடித்துத் தகர்த்து விரட்டும் போக்கை எப்போதுதான் நிறுத்தப்போகிறீர்கள்? இதுவெல்லாம்தான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய இலட்சணமா?

பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தீர்கள். பிறகு, தற்காலிகப் பணியாளர்களாகவே அவர்களை வைத்திருக்கவும் காலிப் பணியிடங்களுக்கும் தற்காலிக ஆசிரியர்களையே நியமிக்கவும் ஆண்டுக்கணக்கிலான ஒப்பந்த முறையைக் கொண்டு வருவோம் என்றீர்கள். இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதற்குத் தடை விதித்திருப்பதுடன் 'நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன சிக்கல்?' எனக் கேள்வியும் எழுப்பி உள்ளது. இப்படியெல்லாம் சொல்வதொன்றும் செய்வதொன்றும்தான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் இலட்சணமா?

தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது? நாள்தோறும் தமிழ்நாட்டிற்குள் ஆயிரக்கணக்கில் வந்திறங்கும் வடமாநிலத்தவர், உள்ளூர்த் தமிழர்களுக்கு வேலைகொடுக்க எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தும் அளவிற்குத் திரண்டுவிட்டார்கள். தமிழர் உரிமைகளையும் நலன்களையும் இப்படித் தாரைவார்த்துவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் திராவிட மாடலா? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் இலட்சணமா?

30 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்களின் கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தீர்கள். பிறகு அதுகுறித்தான எந்த அறிவிப்பும் வரவில்லையே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய இலட்சணமா?

கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள்! பிறகு, தகுதி உடையோர்க்குதான் தள்ளுபடி என நிபந்தனையிட்டுப் பயனாளர்களைப் பெருமளவில் குறைத்தீர்கள். கடைசியில், இதுவரை நகைக்கடன் பெறாதோர் உடனடியாகப் போய் பெற்றுக்கொள்ளுங்கள். ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் தள்ளுபடி செய்வோம் எனப் பரப்புரையில் உறுதியளித்த தம்பி உதயநிதியின் பேச்சை நம்பிக் கடன் வாங்கிய மக்கள் வட்டி செலுத்த முடியாமல் திண்டாடி வருவது பெருஞ்சோகம். இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய இலட்சணமா?

மகளிர் சுயஉதவிக்குழுவினரின் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தீர்கள். அதையும் முழுமையாகச் செய்தபாடில்லை. இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய இலட்சணமா?

இவை மட்டுமின்றி...

அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும் எனச் சொன்னீர்கள். எத்தனைத் தொகுதிகளில் அப்படியான முகாம்கள் நடத்தி வருகிறீர்கள்? அதனால் குறைகளுக்குத் தீர்வு கண்ட மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது? அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

நடைபாதை வாசிகளுக்கு இரவுநேரக் காப்பகங்கள் அமைக்கப்படும் என்ற உங்களின் அறிவிப்பு எந்த நிலையில் இருக்கிறது? அதற்காக மேற்கொள்ளப்பட்ட செயல்திட்டங்கள் என்ன?

இயற்கை எரிவாயுவில் இயங்கும் புகையில்லாப் பேருந்துகள் தமிழக மாநகராட்சிப் பகுதிகளில் இயக்கப்படும் என்று அறிவித்தீர்கள். எப்போது அந்த புகையில்லாப் பேருந்துகளை இயக்கப்போகிறீர்கள்?

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்கூடைத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றீர்கள்! அத்திட்டம் என்ன ஆனது?

60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான உதவித்தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது?

ஏழை மக்களின் பசி தீர, முதல் கட்டமாக 500 இடங்களில் உணவகம் அமைக்கப்படும் என உறுதியளித்தீர்கள். எத்தனை இடங்களில் இதுவரை உணவகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன?

மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட தமிழ்நாட்டுப் பள்ளிகள் அனைத்திலும் 8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம் ஆக்கிடச் சட்டம் கொண்டு வரப்படும் என அக்கறையுடன் அறிவித்தீர்கள்! அண்மையில் வந்தப் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் 47,000 பேர் தமிழ்மொழிப் பாடத்தில் தோல்வியுற்றதாகத்தான் செய்தி வந்தது. இனியாவது தமிழ் கட்டாயப்பாடம் ஆக வேண்டியதன் தேவை உணர்ந்து அச்சட்டத்தை இயற்றுவீர்களா?

தமிழ் எழுத்தின் வரிவடிவம் சிதைக்கப்படுவதைத் தடுக்க புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவித்தீர்கள். அச்சட்டம் இயற்றப்பட இன்னும் எவ்வளவு காலமாகும்?

அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றளிக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது? அதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்தான் என்ன?

வாழை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, பருப்பு, மிளகாய், சிறுதானியங்கள், தேயிலை, எண்ணெய்வித்து போன்றவைக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என உறுதியளித்தீர்கள். நிர்ணயம் செய்துவிட்டீர்களா?

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வற்புறுத்துவோம் என வாக்குறுதி அளித்தீர்கள். அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

நீர்ப்பாசனத்துறைக்கு மாற்றாக புதிய நீர்வள ஆதாரங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும்; நீர் மேலாண்மை ஆணையம் அமைத்திடச் சட்டம் கொண்டு வரப்படும்; முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் 10 ஆயிரம் கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்புச் சிறப்புத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றெல்லாம் அடுக்கடுக்காக அறிவித்தீர்கள்! என்னவாயின அவையெல்லாம்?

அரசுத் துறை நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணிகளில் உள்ள அனைத்து பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றளிக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது?

அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என அளிக்கப்பட்ட வாக்குறுதியின் நிலை என்ன?

இந்தியாவில் வசிக்க விரும்பும் அகதிகளுக்கு இந்தியக்குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள்! ஆனால், அகதிகளாகப் பதிவுசெய்த ஈழச்சொந்தங்களுக்கு, உரிய உரிமைகளைக்கூடப் பெற்றுத்தராது, அவர்களைச் சட்டவிரோதக் குடியேறிகள் எனக்கூறி, சிறப்பு முகாம் எனப்படும் சித்ரவதைக் கூடங்களில் அடைத்து வைத்து வேடிக்கைப் பார்க்கிறீர்கள். இதுதான் உங்களது சமூக நீதி ஆட்சியா? இப்படித்தான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்களா?

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை ஒன்றிய அரசு வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தீர்கள்! அதற்கென எடுத்த ஒற்றை நடவடிக்கை உண்டா? முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளை நினைவுகூறவே தடைவிதித்துக் கெடுபிடி செய்கிற நீங்களா இனப்படுகொலைக்கு நீதிகேட்கப் போகிறீர்கள்? சமூக நீதியென்று பேசிவிட்டு, தமிழின நீதியைப் பேச மறுப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? இதுவெல்லாம்தான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய இலட்சணமா?

இப்படி உங்களால் நிறைவேற்றப்படாத வெற்று வாக்குறுதிகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன! மேற்சொன்ன யாவும் தேர்தல் காலத்தில் அள்ளி நீங்கள் அளந்துவிட்டு, இன்றுவரை நிறைவேற்றாமல் விட்டவற்றின் சில துளிகள்தான்!

உண்மை இவ்வாறிருக்க, தேர்தல் வாக்குறுதிகள் முழுவதையும் நிறைவேற்றிவிட்டதாகக்கூறுவது உண்மைக்குப் புறம்பானது இல்லையா? அப்படிக் கூற உங்களின் உளச்சான்று உறுத்தவில்லையா? கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டீர்கள் என அண்ணா மேல் ஆணையாகத்தான் உங்களால் சொல்ல முடியுமா முதல்வர் அவர்களே..?

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman say about nallatchi nayagan issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->