எஸ்.ஏ.சி.,யின் முதல்வர் கருத்துக்கு சீமான் அளித்த பரபரப்பு பேட்டி.! முதல்வர் ஸ்டாலின் தொடங்கிய திட்டத்துக்கு வரவேற்பு.!
SEEMAN SAY ABOUT SAC
கச்சத்தீவை மீட்பதுதான் மீனவர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்றும், காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து கருது தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், "இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் மட்டும்தான் கொடுக்க முடியும். இந்திய ஒன்றிய அரசுதான் தலையிட்டு இந்துபோன்ற செயல்கள் தொடரா வண்ணம் தீர்வுகாண வேண்டும். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறும் குற்றச்சாட்டை நான் அருவருக்கிறேன். கடலில் எப்படி எல்லை பிரிக்க முடியும்? கைது செய்யப்படுபவர்கள், கொல்லப்படுகிறவர்கள் தமிழர்கள் என்பதால் இந்திய ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதில்லை.
ஒரு மகாராஷ்டிரா மீனவர் கொல்லப்ப்பட்டதற்குப் பாகிஸ்தான் இராணுவத்தின் மீது வழக்கே தொடரப்பட்டது. ஆனால் 800 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போது அத்தகைய நடவடிக்கை ஏன் இல்லை? அதிக வரி செலுத்தும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.
தமிழர்களின் வரி வேண்டும், வாக்கு வேண்டும், அவர்களின் உயிரோ, உடைமையோ, உரிமையோ வேண்டாம் என்பதை எப்படி ஏற்பது? காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதே எதார்த்த உண்மையாக இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கடிதம் மட்டுமே எழுதுவதாக விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது அவரும் கடிதம் மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறார்.
18 ஆண்டுகளாக ஒன்றிய அமைச்சரவையில் தொடர்ச்சியாகத் திமுக அதிகாரத்திலிருந்தபோது கட்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடல் தாமரை மாநாடு நடத்தி கட்சதீவை மீட்போம் என்று சொன்ன பாஜக தற்போது அதுகுறித்து வாயே திறப்பதில்லை. கச்சத்தீவை மீட்பதுதான் மீனவர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு.
எஸ்ஏசி கருத்தான 'பெருந்தலைவருக்கு பிறகு அவரளவுக்கு ஒரு நேர்மையான முதல்வர் இல்லை' என்ற கருத்தை நான் ஏற்கிறேன்.
நெகிழிப் பைகளுக்கு மாற்றாக, மஞ்சள் பை திட்டத்தைத் தமிழக முதல்வர் தொடங்கியுள்ளதை வரவேற்கிறேன். வெற்று அறிவிப்பாக இல்லாமல் அதைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்" என்று சீமான் தெரிவித்தார்.