திருமாவளவன் சொல்வது தவறு - சீமான் பரபரப்பு பேட்டி.!
seeman say about thiruma tamil speech
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிற்கு முன் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக இன்று (31.05.2022) காலை 10 மணியளவில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிபதி முன் ஆஜராகினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சீமான் தெரிவிக்கையில்,
"தமிழ்த்தேசியம் என்றால் பார்ப்பனர்கள் உள்ளே வந்துவிடுவார்கள் என்று அண்ணன் திருமாவளவன் அவர்கள் கூறுவது தவறானது. கடந்தகாலத்தில் எங்களுக்கு தமிழ் தேசியத்தை கற்பித்தது விதைத்தது அவர்கள்தான். அப்போது தெரியவில்லையா பார்ப்பனர்கள் உள்ளே வந்துவிடுவார்கள் என்று.
எங்களை போன்ற பிள்ளைகளுக்கு இந்த சிந்தனையை விதைத்தது யார்? அப்போது அவர் பார்ப்பனியத்திற்கு ஆதரவாக செயல்பட்டார் என்று கொள்ளலாமா? நான் இந்து, எங்கள் அம்மா இந்து என்கிறார். ஆர்எஸ்எஸ், பாஜக கோட்பாட்டையே இவர்களும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இவர்கள்தான் இந்துத்துவ கோட்பாட்டை கருத்தியலை வழிமொழிந்து பேசி வளர்க்கிறார்கள்.
இந்த நிலத்தில் தமிழியத்திற்கும் ஆரியத்திற்கும்தான் நேரடிப்போர் நடந்திருக்கிறது. எங்கள் இலக்கியங்கள் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்றுதான் பாடுகிறது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்தான். தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும்தான் சண்டை. தமிழர் கழகம், தமிழ்த்தேசியம் என்று பேசினால் பிராமணர்கள் வந்துவிடுவார்கள் என்று சொன்னார்கள்.
13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி நடத்திக் கொண்டிருக்கின்றோம் ஒரு பார்ப்பனர் கூட வரவில்லை. ஆனால் பார்ப்பனரே வரமாட்டார் என்று சொன்ன திராவிட கட்சியின் தலைவராக 35 ஆண்டுகளாக ஆரிய பெண்மணியான ஜெயலலிதா இருந்தவிட்டு சென்றுவிட்டார் அதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்?
நாங்களா மயிலாப்பூரில் சிவ இரவு எடுத்து, பசுமடம் கட்டி, பல்லாக்குக்கு அனுமதி எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்? பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் கூட இல்லாத அளவுக்கு, மக்கள் வீடுகளை இடித்துவிட்டு பசுவிற்கு மடம் கட்டுவதென்பது எவ்வளவு பெரிய முற்போக்கு புரட்சி. தொடங்கிய காலத்திலிருந்து இந்த மண்ணில் பாஜக, ஆர்எஸ்எஸ் கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து இடைவிடாமல் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தமிழ்த்தேசிய இயக்கங்கள்தான்" என்று சீமான் தெரிவித்தார்.
English Summary
seeman say about thiruma tamil speech