மாதம் ரூ.60,000 சம்பாதிப்போர் ஏழைகளா? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின் கேள்வி!
Stalin said EWS Reservation is against social justice
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்து கட்சிகள் தலைவர்கள் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக, பாஜக, புதிய பாரதம் போன்ற சில கட்சிகள் புறக்கணித்தன. இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் "மிக அவசரமான நிலையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நூற்றாண்டு காலமாக போற்றி பாதுகாத்து வந்த சமூகநீதி கொள்கைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பை கொடுப்பதுதான் சமூக நீதிக் கொள்கை. பிற்படுத்தப்பட்டவராக இருப்பதற்கான சலுகைகளை தடுப்பது என்பது தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம்.
இட ஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என இதுவரை கூறி வந்தவர்கள் சிலர் இந்த இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கின்றனர். அதன் சூட்சுமத்தை விளக்கமாக சொல்ல தேவையில்லை. அரசியல் லாப நோக்கம் குறித்து பேச விரும்பவில்லை. பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு எந்த நோக்கமாக இருந்தாலும் சமூகநீதி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு சரியானதாக இருக்கும். இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல என உச்சநீதிமன்றமே பலமுறை கூறியுள்ளது. மாத வருமானம் ரூ.66,000 பெறுவோர் ஏழைகளா? ஏழைகளுக்கு எதிரானதால் 10% இட ஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டியது நமது கடமை" என அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார்.
English Summary
Stalin said EWS Reservation is against social justice