தென்காசி: இளம்பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் ஆய்வாளரைக் கைது செய்யாதது ஏன்? இதான் திராவிட மாடலா? சீமான் கண்டனம்! - Seithipunal
Seithipunal


தென்காசி - வீராணத்தில் இளம்பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் ஆய்வாளர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த காவலர் ஆகிய இருவரையும் இதுவரை கைது செய்யாதது வன்மையான கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் காவல் நிலையத்தில் காவல் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றும் சதீஷ்குமார் மற்றும் காவலர் கார்த்திக் ஆகியோர் கடந்த 18.01.25 அன்று வறுமையின் காரணமாகப் படிப்பைப் பாதியில் கைவிட்டு, வீராணம் கிராமத்தில் பெட்டிக்கடை நடத்திவரும் இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, குட்கா விற்பதாகப் பொய்க்குற்றம் சுமத்தி மிரட்டி, பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றபோது, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டதால், தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி வேண்டியும், பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்று மிரட்டிய காவலர்களைக் கைது செய்யக்கோரியும், வீராணம் பகுதி மக்கள் சாலை மறியல் செய்த நிலையில், வேறு வழியின்றிப் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், குற்றச்செயலில் ஈடுபட்ட காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்களின் அறப்போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

ஆனால், உறுதியளித்தபடி குற்றம் செய்த காவலர்களைக் கைது செய்யாமல், அவர்களைப் பணி இடை நீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் முறையாகப் புகார் அளித்துள்ள நிலையில், குற்றத்தில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரை இதுவரை கைது செய்யாதது ஏன்? வீராணம் மக்களுக்கு அளித்த உறுதிமொழியை தமிழ்நாடு காவல்துறை காப்பாற்றத் தவறியது ஏன்? சாமானிய மக்கள் சிறு குற்றத்தில் ஈடுபட்டாலும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தண்டிக்கும் காவல்துறை, குற்றச்செயலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளருக்குச் சலுகை காட்டுவது ஏன்? யாருடைய உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் மீதான நடவடிக்கை தவிர்க்கப்பட்டது?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், குற்றவாளிகளுக்கு அரசே துணைபோகும் கொடும்போக்கு நிலவுகிறது. அம்மையார் கனிமொழி பங்கேற்ற திமுக கட்சி நிகழ்வில், பெண் காவலர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுகவினரை காக்க முயன்றதில் தொடங்கி, அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் துன்புறுத்தல் செய்த திமுகவின் ஞானசேகரனை காக்க முயன்றது வரை பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றும் திமுக அரசின், அதிகார தவறுகளின் உச்சமாக தற்போது தென்காசி வீராணத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்த காவல்துறையினர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்குப் பெயர்தான் இந்தியா வியக்கும் திராவிட மாடலா?

ஆகவே, தென்காசி மாவட்டம் வீராணத்தில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் காவலர் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து, உரிய நீதி விசாரணை நடத்தி, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்" என சீமான் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thenkasi incident NTK Seeman Condemn to DMK Govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->