அதிமுக-பாஜக கூட்டணி விவகாரம்..!! நாளை கூடுகிறது மையக்குழு.. ஆக்ஷனுக்கு ரெடியாகும் அண்ணாமலை..!!
TN BJP central committee meeting held tomorrow under Annamalai
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருந்து வருவதாக சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்து இருந்தார். அதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உறுதிப்படுத்தி இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக அதிமுக நிர்வாகிகளுக்கும் தமிழக பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இதனால் அதிமுக-தமிழ்நாடு பாஜக இடையே கடந்த சில மாதங்களாக உரசல் போக்கு நீடித்து வருகிறது.
பாஜக கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என பேசி இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு சில பாஜக மூத்த நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு இருந்ததால் தேர்தல் வேலையில் பிஸியாகிவிட்டார்.
இந்த நிலையில் நாளை தமிழக பாஜகவின் மைய குழு கூட்டம் நாளை சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மையக்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளை நடைபெற உள்ள அண்ணாமலை தலைமையிலான மையக்குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் கூட்டணி, அண்ணாமலை மேற்கொள்ள உள்ள நடைபயணம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று தமிழக பாஜகவில் உள்ள பல மூத்த நிர்வாகிகள் குறித்து இந்த மையக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதிமுகவுடனான கூட்டணி குறித்து இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க தமிழ்நாடு பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், மையக் குழுவில் எடுக்கும் முடிவுகளை டெல்லி தலைமைக்கு அனுப்ப அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
TN BJP central committee meeting held tomorrow under Annamalai