தமிழகத்தை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்லும் திமுக! சிந்தாதிரிப்பேட்டை கொடூர சம்பவத்தை சுட்டிக்காட்டும் பாஜக!
TN BJP condemn to DMK Govt MK Stalin
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி ஒருவர் தொடர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைப் படம் போட்டுக் காட்டுவதாக, தமிழ்நாடு பாஜக விமர்சித்துள்ளது.
இதுகுறித்த அதன் அறிக்கையில், "பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் தமிழக காவல்துறை முதலில் அக்குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்ததாக வெளியான செய்திகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கைகட்டி வேடிக்கை பார்ப்பதில் பெயர்போனது இந்த திராவிட மாடல் அரசு என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கிறது.
“பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்று பெண்களைப் போற்றிப் பாதுகாத்த தமிழகம் இன்று நாளுக்கு நாள் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக உருமாறிக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்கையில் நெஞ்சம் பதைபதைக்கிறது.
தமிழக பெண்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வெறியாட்டங்கள், இந்த திராவிட மாடல் அரசின் கையலாகத்தனத்திற்கு கிடைக்கும் சாட்டையடிகள். தமிழகத்தின் சோடை போன சட்டம் ஒழுங்கை உயிர்ப்பிக்க இன்னும் எத்தனை பெண்களின் வாழ்வு சூறையாடப்பட வேண்டும்?
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்வதும், அதை திமுக அரசு தட்டிக்கழிப்பதும் மாபெரும் அழிவிற்கான அறிகுறி என்பதை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் எப்போது உணர்வார்? பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாதவர்களுக்கு பதவி பந்தோபஸ்து எதற்கு? விதவிதமான ஒப்பனையில் போட்டோஷூட் எடுத்து விளம்பர ஆட்சி நடத்துவதற்கா?" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN BJP condemn to DMK Govt MK Stalin