டெல்லி : தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பிரதமர் மோடியுடன் சந்திப்பு..!
TN Governor R N Ravi Meets PM Modi in Delhi
ஐந்து நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, இன்று (ஜூலை 16) பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பில் தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் மற்றும் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து பிரதமருடன் ஆளுநர் விவாதித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தியதில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் தமிழக பாஜக மற்றும் தமிழகத்தில் உள்ள அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து மனு அளித்திருந்தனர்.
இந்த நிகழ்வின் ஈரம் காய்வதற்குள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் அவரது வீட்டிற்கு அருகிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 11 பேரை கைது செய்துள்ள காவல்துறை, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் சிபிஐ விசாரணை தேவை என்று பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் ஆளுநர் ஆர். என். ரவி ஐந்து நாள் பயணமாக டெல்லி
சென்றுள்ளார்.
இன்று பிரதமரை சந்தித்து விவாதித்த ஆளுநர், அடுத்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோரை சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ஆளுநரின் டெல்லி பயணமும், பிரதமரை சந்தித்துப் பேசியுள்ளதும் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
TN Governor R N Ravi Meets PM Modi in Delhi