இது சரியில்லை... திரும்ப பெருங்கள்... தமிழக அரசை ஆளும் திமுக கூட்டணி கட்சியே வலியுறுத்தும் நிலைமை.!
TNGovt vs dmk alliance party
ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிக நியமனத்தை கைவிட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமித்திட வேண்டும் என்று, தமிழக அரசுக்கு ஆளும் திமுகவின் கூட்டணி கட்சி சிபிஐ (எம்) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இதனால் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்புவதை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்தே வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே ஆசிரியர் நியமனம் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக கடந்த 2012-13 கல்வி ஆண்டிற்குப் பிறகு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்பதிலிருந்தே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதை அதிமுக அரசு புறக்கணித்து வந்துள்ளதை தெரிந்துகொள்ள முடியும். கடந்த 10 ஆண்டு காலமாக ஆசிரியர்கள் பணியிடங்கள் நியமனம் இல்லாததால் வேதனையில் இருந்த இளைஞர்கள், திமுக அரசு இந்த காலி பணியிடங்களை நிரப்பும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, கொரோனா பேரிடருக்குப் பின்னால் தனியார் பள்ளிகளில் பயின்றுவந்த மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, அரசுப் பள்ளிகளில் கூடுதலான ஆசிரியர்களை நியமிப்பது, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்றவற்றில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. ஆனால், மீண்டும் மீண்டும் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதால் மாணவர்களின் கல்வித்தரம் மிக மோசமான வகையில் பாதிக்கப்படும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்று பல்லாயிரக்கணக்கானோர் பணிநியமனத்திற்காக காத்திருக்கின்றனர். அவர்களை இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் உடனடியாக நியமிக்க முடியும். அது போல முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப முடியும்.
எனவே, தற்போது தற்காலிக முறையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மேலும், அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்துக் காலிப்பணியிடங்களையும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
English Summary
TNGovt vs dmk alliance party