சமூக விரோத சக்திகளைப் பார்த்து அரசு அஞ்சி நடுங்குகிறதா..? - டிடிவி தினகரன் கடும் கண்டனம்!
TTV Dhinakaran Condemn to DMK Govt For VAO murder issue
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மணல் கொள்ளை தொடர்பான விவகாரத்தில், தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் பணியில் இருக்கும் போதே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு கனிம வளக் கொள்ளைகளைத் தி.மு.க. அரசு தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பதினால் ஏற்பட்ட விளைவுதான் இந்தப் படுகொலை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சி என சொல்லி, ஒருபுறம் மக்களை தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது. மறுபுறம் கனிம வளக் கொள்ளையைத் தடுக்க முற்படும் நேர்மையான அதிகாரிகள் மீது தாக்குதலும், படுகொலைகளும் சமூக விரோதிகளால் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை நடைபெற்ற தாக்குதல்களுக்கும் படுகொலைகளுக்கும் என்ன பதில் சொல்லப் போகிறார் முதல்வர்?
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தீர்வு என்றால் இந்தப் படுபாதக செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீதான நடவடிக்கை என்ன? இந்த சமூக விரோத சக்திகளைப் பார்த்து அரசு அஞ்சி நடுங்குகிறதா" என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
TTV Dhinakaran Condemn to DMK Govt For VAO murder issue