கொஞ்சமாச்சும் உண்மையைப் பேசுங்க முதல்வர் ஸ்டாலின் அவர்களே! பாயிண்ட் போட்டு பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan Condemn to DMK MKStalin BJP vs DMK
பாஜக எம்எல்ஏ-வும், பாஜகவின் மகளிர் அணியின் தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஒரு மாநிலத்தின் முதல்வராக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் உங்கள் பேச்சுகளில் சற்று உண்மைத்தன்மை கலந்திருத்தல் வேண்டியது அவசியம்.
மாறாக, “மத்திய அரசு நம்மை வஞ்சித்துவிட்டது, மத்திய அரசு நமக்கு நிதி ஒதுக்கவில்லை, ஏன் நமது பெயரைக் கூட உச்சரிக்கவில்லை” என எவ்வித ஆதாரமுமின்றி, வாய்க்கு வந்ததைப் பேசுவது ஒரு மாநில முதல்வருக்கு அழகல்ல.
ஒரு மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றால், அம்மாநிலத்தை ஒதுக்கிவிட்டதாக அர்த்தமாகிவிடுமா?
அவ்வாறு இருப்பின் UPA ஆட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அனைத்து மாநிலங்களின் பெயரும் உச்சரிக்கப்பட்டதா?அவ்வளவு ஏன், தமிழக பட்ஜெட் தாக்கலின்போது நீங்கள் அனைத்து மாவட்டங்களின் பெயர்களையும் குறிப்பிட்டீர்களா?
மேலும், கடந்த 10 ஆண்டுகால தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான ஆட்சியில், எண்ணற்ற நலத்திட்டங்களால் தமிழகம் மிகுந்த பயனடைந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.
அவற்றில் சில,
* முத்ரா கடனுதவி மூலம், இதுவரை தமிழகத்திற்கு ரூ.2,49,179 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் ரூ.2,145 கோடி மதிப்பிலான 11 மருத்துவக் கல்லூரிகளை, ஒரேநாளில் துவங்கிவைத்தார் நமது பிரதமர் மோடி
அவர்கள்.
* விவசாயிகள் கௌரவிப்பு நிதியின் மூலம், 44 லட்சத்திற்கும் அதிகமான தமிழக விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
* பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் மூலம், 11,47,060 லட்ச ஏழை மக்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
* பிரதமரின் இலவச எரிவாயு திட்டத்தின் கீழ், இதுவரை சுமார் 56 லட்சத்துக்கும் அதிகமான தமிழக பெண்கள் இலவச எரிவாயுவைப் பெற்று பலனடைந்துள்ளனர்.
* உடான் திட்டத்தின் கீழ், இதுவரை தமிழகத்தின் 5 விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
* மத்திய அரசின் இரயில்வே திட்டங்கள் மூலம், தமிழகத்திற்கு 6 வந்தே பாரத் இரயில்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மத்திய அரசு திட்டங்களால் நமது தமிழகம் இதுவரை அடைந்துள்ள பயன்கள் அனைத்தையும் உங்களால் மறுக்க முடியுமா முக ஸ்டாலின் அவர்களே? அல்லது உங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி உங்கள் கண்களை மறைத்துவிட்டதா?
எனவே, இனிமேலும் தொடர்ந்து பொய் பரப்புரைகளைப் பரப்பி, தமிழக மக்களைக் குழப்பி அதில் அரசியல் ஆதாயம் ஈட்டுவதை விட்டுவிட்டு, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதில் சற்று கவனம் செலுத்துங்கள் முக ஸ்டாலின் அவர்களே.
English Summary
Vanathi Srinivasan Condemn to DMK MKStalin BJP vs DMK