சதமடித்த தக்காளி விலை.. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்..!!
vijayakanth statement for tomato price
சதம் அடித்துள்ள தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன. இதனால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 வீதம் மத்திய அரசு குறைத்துள்ளது. இதனை தேமுதிக வரவேற்கிறது.
கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது போல பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை கேரளா, ராஜஸ்தான் மாநில அரசுகளும் குறைத்துள்ளன. இதனால் அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை பெருமளவு குறைந்துள்ளது.
அதேபோல் தமிழக மக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசும் குறைக்க வேண்டும். மேலும் சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தக்காளி மற்றும் பீன்ஸ் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்து வருகின்றனர். சதம் அடித்துள்ள தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
vijayakanth statement for tomato price