உருவமே இல்லாத பெருமாள்... சொர்க்கவாசல் திறப்பு கிடையாது.! அரியலூரின் அதிசயம்.!
Ariyalur kallangurichi Temple
அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில்:
இன்று அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
இந்த கோயில் எங்கு உள்ளது?
அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சியில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
அரியலூர் நகரிலிருந்து கிழக்கே இரும்புலி கிராமம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ தூரத்தில் இந்த கோயில் உள்ளது. அரியலூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து மினி பஸ், ஆட்டோ வசதியுள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
உற்சவர் கலியுக வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.
மூலஸ்தானத்தில் 12 அடி உயரத்திலான கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் உள்ளது. இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. மாறாக உற்சவமூர்த்தி புறப்பாடு உள்ளது.
தாயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது. மூலவரே கம்பத்தில் இருப்பதால் தாயாரும் உடனிருப்பதாக ஐதீகம்.
வேறென்ன சிறப்பு?
கோயிலில் உள்ள தசாவதார மண்டபத்தில் பத்து அவதாரங்களின் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளது.
சிற்ப வேலைபாடுகள் நிறைந்த கோயிலாக உள்ளது.
மூலஸ்தானம் அருகிலேயே தலவிருட்சமான மகாலிங்கமரம் உள்ளது. இது ஆதிகாலத்திலிருந்தது போலவே இன்றும் தளிர்த்து செழித்து காட்சி தருகிறது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
250 வருடங்கள் பழமை வாய்ந்த இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ராமநவமி அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் பெருவிழா நடைபெறுகிறது.
மகா சிவராத்திரி அன்று திருமாலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
சித்திரை தமிழ் வருடப்பிறப்பு, சித்திரா பௌர்ணமி, அட்சயதிருதியை அன்று சுவாமி கருட வாகனத்தில் வீதியுலா.
வைகாசி விசாக நட்சத்திரத்தன்று சுவாமி வெள்ளிக்கருட வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது.
ஆடி பதினெட்டு, கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி சனிக்கிழமை உற்சவம், வீதியுலா, கார்த்திகையில் திருகார்த்திகை, அனுமன் ஜெயந்தி ஆகியவை கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீராமநவமியில் ஆஞ்சநேயருக்கும், சுவாமி தாயாருக்கும் சேர்ந்து இரண்டு தேர்கள் இழுக்கப்படுகிறது.
பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.
இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறன.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனை செலுத்தப்படுகிறது?
நோயுற்ற கால்நடைகளுக்கு உடல்நிலை சரியாவதற்கு, முதல் கன்று கோயிலுக்கு காணிக்கையாக செலுத்துவதாக விவசாயிகள் பிரார்த்தனை செய்துவிட்டு, அதன்படி கன்றுகளையும் கோயிலுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
விவசாய விளைநிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருந்தால் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
கோயிலை சுற்றிலும் ராட்சத அளவிலான தானிய கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பக்தர்கள் தங்கள் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
English Summary
Ariyalur kallangurichi Temple