தினம் ஒரு திருத்தலம்... நாவல் மரத்தடியில்.. மூன்று வாகனங்களுடன்.. கருப்பசாமி..!!
navaladi karuppannaswami temple
அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் :
தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
கோயில் எங்கு உள்ளது :
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் என்னும் ஊரில் அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்புகள் :
அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலின் பிரதான வாசல் வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.
இத்தலத்தில் மூலவரான கருப்பசாமி சுயம்புவாக காட்சியளிப்பது சிறப்பு.
அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலில் மூலவர் நாவல் மரத்தின் அடியில் காட்சியளிப்பதால் நாவலடியான் என்று பெயர் பெற்றார்.
கருப்பசாமி உற்சவர் மரத்தால் செய்யப்பட்டு தனி சன்னதியில் நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். மூலவருடன் மனைவியர் பொம்மி மற்றும் வெள்ளையம்மாள் காட்சியளிக்கின்றனர்.
இங்கு உற்சவர் சன்னதிக்கு எதிரே உள்ள பிரகாரத்தில் அருகருகில் மூன்று வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
வேறென்ன சிறப்பு :
இத்தலத்தில் வடக்கு வாசலுக்கு நேரே அம்பாள் செல்லாண்டியம்மன் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறார். இவரின் கைகளில் உடுக்கை, சூலம், மலர் மற்றும் குங்குமம் வைத்து அசுரனை சம்ஹாரம் செய்தபடி காட்சியளிக்கிறார்.
அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலின் முகப்பில் கருப்பசாமிக்கு உரிய மூன்று குதிரை வாகனங்கள் அமைந்துள்ளது.
இத்தலத்தில் நந்தி, சிம்மம், குதிரை ஆகிய மூன்று வாகனங்கள் காணப்படுவது சிறப்பு.
திருவிழாக்கள் :
அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலில் எல்லா நாளுமே சுவாமிக்கு விஷேச வழிபாடுகள் நடைபெறும்.
தினமும் திருவிழா போலவே இவருக்கு விஷேச அலங்காரம் மற்றும் வைபவங்கள் நடைபெறுகின்றது.
பிரார்த்தனைகள் :
இத்தலத்தில் கோரிக்கை வைப்பவர்கள் தங்களது வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி நாவல் மரத்தில் கட்டிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் அந்த கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை.
பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க இக்கோயிலில் இருக்கும் மூன்று வேல்களில் மூன்று எலுமிச்சை பழத்தை சொருகி வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்கள் :
இத்தலத்தில் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் ஆடு, சேவல் பலி கொடுத்தும், மணி கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இத்திருக்கோயிலில் வேண்டுதல் நிறைவேறியவுடன் இங்குள்ள அரச மரத்திற்கு சிலர் காலணிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
English Summary
navaladi karuppannaswami temple