ஸ்ரீரங்கத்தில் ரங்கா... ரங்கா.. கோஷங்களுக்கிடையே சொர்க்கவாசல் திறப்பு.!
sorkavasal open sri rangam renganathar temple
இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள வைணவ தளங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களின் கோவிந்தா... ரங்கா... கோஷங்களுக்கிடையே அதிகாலை நான்கு மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இந்த வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் என்ற நிகழ்ச்சியுடன் கடந்த 12-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு தினமும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பகல்பத்து உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார்.
அதன் பின்னர், அங்கு மாலை 4.30 மணி வரை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து இரவு எட்டு முப்பது மணிக்கு மூலஸ்தானத்திற்கு வந்தடைந்தார். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியான இன்று அதிகாலை நான்கு மணிக்கு பக்தர்களின் கோவிந்தா...கோவிந்தா..ரங்கா .... ரங்கா... என்ற கோஷங்களுகிடையே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வந்து சுமார் 1 மணிநேரம் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
English Summary
sorkavasal open sri rangam renganathar temple